அமெரிக்காவுக்கு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ஷ

மக்கள் போராட்டத்திற்கு பின்னர் பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கு முன்னர் கடந்த ஜூலை 10ஆம் திகதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியிருந்தனர்.

மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெள்ளாலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தார்.

இந் நிலையிலேயே தற்போது அவர் குடும்பத்தாருடன் அமரிக்கா நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.