ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! சுயாதீன நீதித்துறை குழு எடுத்துள்ள தீர்மானம்

2021 ஆம் ஆண்டு இலங்கையின் பெண் கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக ஜப்பானின் நாகோயாவில் உள்ள குடிவரவு மையத்தின் அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவதில்லை என்று சட்டத்தரணிகள் எடுத்த முன்னைய முடிவு நியாயமற்றது என்று சுயாதீன நீதித்துறை குழு ஒன்று தீர்மானித்துள்ளது.

இது இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் தொழில்முறை அலட்சியத்தால், இலங்கை யுவதியான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமா என்பது தொடர்பில் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பிராந்திய குடிவரவு சேவைகள் அதிகாரிகளிடம், சுயாதீன நீதித்துறை குழு கோரியுள்ளது.

விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்ட விஷ்மா, வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று மரணமானார்.

குடும்பத்தினர் முறைப்பாடு
இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து வழக்கை விசாரித்த நகோயா மாவட்ட அரசு சட்டத்தரணிகள்; அலுவலகம், குடிவரவு இயக்குநர் உட்பட 13 அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று ஜூன் மாதம் முடிவு செய்தது.

இறப்புக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வரவோ அல்லது அவரது தடுப்புக்கும் அவரது மரணத்திற்கும் இடையே ஒரு காரண உறவை ஏற்படுத்த முடியவில்லை என்பதே இதற்கான காரணம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

எனினும் விஷ்மாவின் சகோதரிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு நீதித்துறை குழுவிடம் முறைப்பாட்டை அளித்தனர்.

இறந்த யுவதியின் சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர், நகோயா குடியேற்ற தடுப்பில் உள்ள அதிகாரிகள், தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் விஷ்மா வாழ்ந்திருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்தே தற்போது இந்த சுயாதீனக் குழுவின் தீர்மானம் வெளியாகியுள்ளது. விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார்.

எனினும் ஏதிலி அந்தஸ்துக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் விசாவைக் கடந்து சென்றதற்காக, 2020 ஆகஸ்ட் இல் குடிவரவு வசதியில் காவலில் வைக்கப்பட்டார்.