கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச் சபையின் முதல் அமர்வில் உரையாற்றிய குட்டெரெஸ், கொரோனா வைரஸுக்கு எதிரான விரைவான தடுப்பூசி பரிசோதனைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியினால் பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக நீடிக்கும் கொரோனா சேதத்தை தடுக்க முடியாது என்றும் தீவிர வறுமை அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் சுமார் 1.5 மில்லியன் மக்களை உயிரிழக்கச் செய்துள்ள கொரோனா தொற்று சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்று நீண்டகால சவால்களை அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று முழு உலகையும் பாகுபாடு காட்டாமல் பாதித்தாலும், சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் நாடுகளிடையே வேறுபடுகின்றன என்றும் அன்டோனியோ குட்டெரெஸ் சுட்டிக்காட்டினார்.

எனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், ஏழை நாடுகளுக்கு நிதி ரீதியாகவும் பிற வழிகளிலும் உதவவும் சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு வைத்துள்ளார்.