இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்தில் வரவேற்கத்தக்கது -போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானதாக உள்ளதுடன்,வரவேற்கத்தக்கதாகவும் காணப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு புகையிரத பாதையில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் வகையில் மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் என்றுமில்லாதவாறு நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு பொதுபோக்குவரத்து சேவையில் தாக்கம் செலுத்தியுள்ளது.பொது போக்குவரத்து சேவைத்துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் வழங்கும் உயரிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.

மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதை அபிவிருத்தி இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டமாக கருதப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியாவின் அபிவிருத்தி பணிகள் ஒரு மையத்தை மாத்திரம் வரையறுத்ததாக அமையவில்லை.

இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என்றார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தில் முதல் கட்டமாக 48 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக வவுனியா முதல் ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும்.