இலங்கை,பாகிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை விரிவுபடுத்த விரும்புகிறேன் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் பர்கி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் பர்கி மற்றும் இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் புதிய தலைவர் கீர்த்தி குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தகம், கூட்டு முயற்சிகள் மற்றும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை வர்த்தக, கைத்தொழில் சம்மேளனம் மற்றும் ஏனைய வர்த்தக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றத்தயாராக இருப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கீர்த்தி குணவர்தனவிடம் உறுதியளித்தார்.

அத்தோடு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகளில் காணப்படும் தடைகளுக்கு உரியவாறு தீர்வுகாண்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அதேவேளை பாகிஸ்தான் வர்த்தக சமூகத்துடன் இலங்கை பேணிவரும் நீண்டகாலத்தொடர்பைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், எதிர்வருங்காலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தொடர்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.