நிலையான நிதி முகாமைத்துவ பாதையில் பிரவேசிப்பதன் மூலம் நாணய நிதியத்திடமிருந்து கூடுதல் நிதி வசதிகளைப் பெற முடியும் ; பிரதமரிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு

நிலையான நிதி முகாமைத்துவ பாதையில் பிரவேசிப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் நிதி வசதிகளை இலங்கையால் பெற்றுக் கொள்ள முடியும் என இந்தியா நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பில் இருதரப்பு ஒப்பந்தம் , கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கைக்கு வழங்கப்படும் இந்தியாவின் ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்தமைக்காக பிரதமர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

அத்தோடு கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது 4 பில்லியன் டொலர் கடனுதவிகளை வழங்கியமை மற்றும் நம்பகமான , நெருங்கிய நண்பனாக இந்தியா தொடர்ந்தும் வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

‘இலங்கை இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விரைவில் மீண்டு வரும் என்று நம்புகின்றோம். எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அனைத்து வழிகளிலும் நாம் இலங்கைக்கு உதவுவோம்’ என்று இதன் போது அமைச்சர் ஜெய்ஷங்கர் பிரதமரிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் நிதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக, மேலும் நிலையான நிதி முகாமைத்துவ பாதையில் இலங்கை பிரவேசிக்க முடியும் என இந்தியா நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச மின் இணைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

‘இலங்கையானது காற்று மற்றும் சூரிய ஒளி அதிகம் உள்ள நாடு என்பதால், இது போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது’ என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள 4.2 மில்லியன் மாணவர்களுக்கான 19 மில்லியன் பாட நூல்களை அச்சிடுவதற்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன் போது நன்றி தெவித்தார்.

இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்த கல்வித்துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துமாறும் அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.