13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

13 ஆவது திருத்தம் இன்றும் அரசியலமைப்பில் காணப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டிடவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மாகாணசபைகளை அனைத்து தரப்பும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனை ஏற்றுக் கொண்டமையின் காரணமாகவல்லவா தேர்தலில் போட்டியிட்டனர்? தற்போது தேர்தலுக்காக புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளமையால், இனவாதத்தைத் தூண்டுவதே இலகுவான விடயமாகும். எனவே தான் அதனை செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் தேர்தலில் தாக்கம் செலுத்தாது. தேர்தலை நடத்துவதற்கான உரிமை தேர்தல் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானதாகும். இதற்கு எவராலும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையான வாக்குரிமையை எந்தவொரு நிறுவனத்தினாலும் பறிக்க முடியாது என்றார்.