பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இருட்டடிப்பு! போலி விசாரணைகளின் மூலம் வெளியான தகவல்

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஷ் ஷாப்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய காருக்குள் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷாப்டரின் தொலைபேசி பதிவுகளை மதிப்பீடு செய்வதற்கும் தடயவியல் பகுப்பாய்வு செய்வதற்கும் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொரளை பொது மயானத்தில் தினேஷ் ஷாப்டர், தனது காரினுள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டார்.

அதன் பின்னர் அவரது நிறுவனத்தின் சக ஊழியர் அவரை மீட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சைப் பலனின்றி அவர் அன்று இரவு உயிரிழந்தார்.

இந்தநிலையிலேயே சம்பவம் தொடர்பில், பொரளை பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு உள்ளிட்டோர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.