நான் சஹ்ரான் அல்ல ! அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரானைப் போன்று என்னை பார்க்க வேண்டாம். எனது ஆட்சி காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு கத்தோலிக்க மக்களிடமும் இறைவனிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.

என்னால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் இழைத்த தவறுக்காக நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாத நிலையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் எவ்வாறு நான் பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன் என்று கேள்வியெழுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தான் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று தேசிய ஊடகங்கள் காண்பிக்கின்றன.

நான் சஹ்ரானைப் போன்று கொடூரமான கொலைக்குற்றவாளியல்ல. என்னை ஊடகங்களில் பாரதூரமான குற்றவாளியைப் போன்று சித்தரிப்பது கவலையளிக்கிறது. எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கையுடன் 100 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாக சந்தேகிக்கப்படும் 160 சந்தேகநபர்கள் எனது ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது என்னை சஹ்ரானைப் போன்று சித்தரிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் கிழக்கில் பொலிஸாரை அமைதிகாக்குமாறும் , அவ்வாறில்லை என்றால் விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதல்களை மேற்கொள்வர் என்றும் கருணா அம்மான் நிபந்தனை விதித்தார். இதனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பணிப்புரையை ஏற்று அமைதி காத்தமையால் சுமார் 700 பொலிஸார் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அவரது கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனது.

இராணுவ தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா படுகாயமடைந்தார். யுத்த காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு யார் பொறுப்பு? இவை தொடர்பில் எவரேனும் கைது செய்யப்பட்டனரா? இவற்றுக்கு அப்போதைய ஜனாதிபதிகளா பொறுப்பு கூற வேண்டும்?

இல்லையல்லவா? அவ்வாறெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் நான் எவ்வாறு பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன்? இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கின்ற அதே வேளை, இவ்வாறான சதித்திட்டங்களுக்கு அஞ்சுபவன் நான் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் நெல்சன் மண்டேலாவினுடைய வரலாற்றை நன்கு அறிந்தவன். அவர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே அவரைப் போன்றே எனக்கும் எவ்வாறான துன்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். எவ்வாறிருப்பினும் எனது ஆட்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவ்வாறானதொரு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். அம்மக்களுக்கு என்மீது கோபம் இல்லை. அவர்கள் என்னுடன் அன்புடனேயே பழகுகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பிலும் எனது தவறுக்காக நான் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக என்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தவறுக்காகவே நான் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்ட ஈட்டை செலுத்துவதற்கான பொருளாதார வசதிகள் எனக்கு இல்லை என்பதால் , இயன்றவர்களை உதவுமாறு கோருகின்றேன் என்றார்.