அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி 40 தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

புதிய வரி சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கா விடின் நாடளாவிய ரீதியல் வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக எச்சரித்துள்ளன. அது வரையிலான காலப்பகுதியை கருப்பு கொடி எதிர்ப்பு வாரமாக அறிவித்தும் உள்ளன.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்த சட்டத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தி பெற்றோலியம் , துறைமுகம் , மின்சாரம் , நீர் வழங்கல் , வங்கி , வைத்தியத்துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து புதன்கிழமை (22) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

நண்பகல் 12 மணியளவில் கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் குவிந்த பல்வேறு தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றுக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்களால் கோட்டை வீதியின் ஒரு பகுதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

கருப்பு கொடிகளை ஏந்தியவாறும் , கருப்பு பட்டிகளை அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதற்குள் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் , அதன் பின்னர் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

தொழிற்சங்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நிர்வாக சேவைகள் எவையும் முடக்கப்படவில்லை. வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏனையவற்றிலும் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோட்டை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்று கூடி பேரணியாக சென்று வெவ்வேறு வீதிகள் ஊடாக ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்திடம் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய முற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம் , ஜனாதிபதி செயலகம் , நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஏனையோருக்கும் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட பகுதிகளுக்கு பிரவேசிக்கக் கூடிய சகல வீதிகளிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு , நீர்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் ஓரிரு மணித்தியாலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமையால் அங்கு அமைதியற்ற நிலைமை எதுவும் ஏற்படவில்லை.