தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களது மொழி மற்றும் கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர முதலீடுகள் சட்டமூலம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல் தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல் தன்மை ஒருமைப்பாட்டுடனான பயணம் எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

அவ்வாறான நிலை ஏற்படும் போது தான் எம்மால் சுயாதீனமாக செயல்பட முடியும்.அவ்வாறில்லாவிட்டால் எப்போதும் சர்வதேசத்திற்கு கடன்காரனாகவே நாம் இருக்க நேரிடும். அப்போது எமது நாட்டின் சுயாதீனம் என்பது வெறும் கனவாகவே அமையும்.

அதேபோன்று எந்த நாட்டுடனும் நாம் பகைமையுடன் செயல்பட முடியாது அனைத்து நாடுகளுடனான நல்லுறவு எமக்கு மிக அவசியமானது. குறிப்பாக மேற்கத்தைய நாடுகளுடனான சிறந்த நல்லுறவு அவசியமாகும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது.அந்த வகையில் சர்வதேச நாடுகளுட னான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயற்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்து விடக் கூடாது என்றார்.