தமிழர்களின் அமைதிப்போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டிக்குமாறு கனேடியத் தமிழர் தேசிய அவை சர்வதேசத்திடம் வலியுறுத்தல்

இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமை தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதொன்றே இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதி உருவாவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து கனேடியத் தமிழர் தேசிய அவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகள் இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவித்திருக்கின்றது.

தைப்பொங்கல் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது தமிழ்மக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு எதிராக வீதித்தடைகள் பயன்படுத்தப்பட்டு, நீர்த்தாரைப்பிரயோகம் நடத்தப்பட்டதுடன் இலங்கைப்பாதுகாப்புப்படையினரால் அப்போராட்டம் வலுகட்டாயமாக முடக்கப்பட்டது.

மேலும் அப்போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் சிவில் சமூகத்தலைவர் வேலன் சுவாமிகள் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அதேவேளை இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை நிராகரித்து பெப்ரவரி 4 – 7 ஆம் திகதிவரை வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்தில் தமிழ்மக்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலான ஒடுக்குமுறைகள், தொடர் கண்காணிப்புக்கள் உள்ளிட்ட உத்திகள் பாதுகாப்புத்தரப்பினரால் கையாளப்பட்டன.

அதேபோன்று கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிராக அமைதியான முறையில் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்னம் சுகாஷ் ஆகியோர் மேலும் 16 போராட்டக்காரர்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

போராட்டங்களில் ஈடுபடுதல் என்பது ஓர் அடிப்படை உரிமையாகும். இருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ்மக்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, போராட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களது உரிமை தொடர்ந்து வலுகட்டாயமாக அடக்கப்படுகின்றது. இத்தகைய வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்மக்களுக்கு எதிராக ஏழு தசாப்தகாலமாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியாகத் தோற்றம்பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்கூட இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு எதிரான இராணுவ ஒடுக்குமுறைகளைத் தொடர்வதுடன் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்குத் தவறியிருக்கின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து சீர்குலைக்கின்றது. எனவே தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதொன்றே இப்பிராந்தியத்தில் நிலையான அமைதியை உருவாக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.