பாராளுமன்ற நிதி அதிகாரத்தை ஜனாதிபதி சட்டத்துக்கு முரணாக தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளார் – ரஞ்ஜித் மத்தும பண்டார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவியை பாதுகாத்துக்கொள்ளவே தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அத்துடன் அவர் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை சட்டத்துக்கு முரணாக தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது. அவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைகேடாக அந்த அதிகாரத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

சட்டத்துக்கு முரணாகவே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார். நிதி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு நாட்டின் அரசியலமைப்பை மீறி இருக்கிறார்.

அத்துடன் தேர்தல் நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை இல்லாமலாக்கி இருக்கிறது. சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு நீதி மன்றில் தெரிவித்திருக்கிறது.

அப்படியாயின் தற்போது தேர்லை நிறுத்தி இருப்பது சட்டத்துக்கு முரண் இல்லையா என அரசாங்கத்திடமும் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கேட்கிறோம். தேர்தலுக்கு பணம் வழங்கமுடியாது என நிதி அமைச்சின செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் கடனுக்கு எதனையும் செய்யவேண்டாம் என நிதி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன் கடந்த காலங்களிலும் தேர்தல் இடம்பெற்று 6,7 மாதங்களுக்கு பின்னரே தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணம் வழங்கப்படுகிறது. இதுதான் எமது நாட்டின் வழமை. 2020 பொதுத் தேர்தலில் இன்னும் பொலிஸுக்கான நிதி செலுத்தப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு தேவையான பத்திரங்களை அச்சிடுவதற்கான செலவினங்களை தேர்தல் முடிந்த பின்னரே அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தேர்தலில் அரசாங்கத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் 15வீத வாக்குகளே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த தேர்தலை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் அல்ல.

பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். தற்போது எதிர்பார்க்காத வகையில் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவாகினார். தற்போது தேர்தலை நடத்தி அதில் தோல்வியடைந்தால் தனக்கு ஜனாதிபதி பதவியை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

அதனால் 50வருடங்களாக முயற்சித்தும் கிடைக்காத ஜனாதிபதி பதவி எதிர்பாராத வகையில் கிடைத்திருப்பதை, பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தற்போது மக்களின் ஜனநாயக வாக்குரிமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அத்துடன் நிதி அமைச்சின் செயலாளர் பாராளுமன்றத்தின் தீர்மானங்களின் பிரகாரமே செயற்பட வேண்டும். நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்ற்ததுக்கே இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பணம் வழங்க முடியாது என தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் என்றார்.