தேர்தல் ஆணைக்குழு சட்டபூர்வமாக தேர்தல் திகதியை இதுவரை அறிவிக்கவில்லை – ஜனாதிபதி

நாங்கள் தேர்தலை பிற்போடவில்லை. தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தல் திகதியை இதுவரை அறிவிக்கவில்லை. அத்துடன் தற்போது தேர்தல் நடத்துவதற்கு எம்மிடம் பணம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் இன்று வாக்கெடுப்பொன்றை கோரியுள்ளனர். சாதாரணமாக இவ்வாறு வாக்கெடுப்பு கோருவதில்லை.

மின்சக்தி என்பது அத்தியாவசிய சேவை. ஏன் இதனை எதிர்க்கிறார்கள்? ஏன் இந்த சேவைகளை எதிர்க்கிறார்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதை எதிர்க்கட்சி எதிர்க்கிறதா? அல்லது மின்சாரத்தை வழங்குவதா? இதுகுறித்து விவாதம் தேவையெனில் அதனை வழங்க முடியும்.

ஆனால், அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விவாதம் கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறியே விவாதம் கேட்டிருந்தனர். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஒன்று இல்லை.

பொதுவாக இந்த விவாதத்தில் கலந்துகொள்வதில்லை என்று நான் அறிவித்திருந்தேன். ஏனென்றால் எனக்கு அரசியல் தேவையில்லையென்று நான் கூறியிருந்தேன். எனினும், தேர்தல் ஆணைக்குழுவும் இன்று நீதிமன்றத்திற்கு சென்று, தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று கூறுகிறது.

எனினும், சத்தியக் கடதாசியொன்று வழங்கியிருப்பதால் இதுகுறித்து பேச நினைத்தேன். அப்படியில்லையெனில், எனக்கு கீழுள்ள நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாரிய அநீதி ஏற்படும்.

தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உண்மையில்லை.

முதலில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமையையும், தேர்தல் ஒன்றை நடத்த பணம் இல்லை என்பதையும் அதேபோல் இது பொருளாதாரத்திற்கு உகந்தல்ல என்றும், உறுப்பினர் எண்ணிக்கை 5,000இற்கு குறைந்தபின்னர் தேர்தலை நடத்துமாறும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நான் அறிவித்திருந்தேன். நானே அவர்களுக்கு முதலில் அறிவித்தேன்.

இதுகுறித்து நான் விளக்கமளித்திருந்தேன். இது சாதாரண ஆணைக்குழு அல்ல. அதனை இதனைக் கூறும் பொறுப்பு எனக்கு இருந்தது. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த பாராளுமன்றமே நிறைவேற்றியது. இந்த 21ஆவது திருத்தத்தைப் பார்த்தால், இடைக்கால விதிமுறைகளின் மூன்றாவது பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் தினம் முதல் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் பதவி வகிக்கும் அனைவரினதும் பதவிகள் இடைநிறுத்தப்படுகிறது. இந்தத் திருத்தத்தில் நீங்கள் கையெழுத்திடப்பட்ட தினம் முதல் அந்தப் பதவிகள் உடனடியாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதாவது ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது சாதாரண ஆணைக்குழு அல்ல. எவ்வாறாயினும், இந்த திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தும் திகதிக்கு முன்னர் ஏதாவது ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவி வகிக்கும் ஒருவருக்கு, குறித்த ஆணைக்குழு, அரசியலமைப்பின் (vii) பிரிவின்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ள திகதி வரை தமது குறித்த பதவிகளின் அதிகாரங்களையும், பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியும். எனவே, தற்காலிக ஆணைக்குழுவொன்றே இருக்கிறது. இந்த தற்காலிக ஆணைக்குழு, விசேடமாக அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கே பொறுப்பு கூறுகிறது.

வேறு யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லை. எனவே, உங்களுடனும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி, இந்த ஆணைக்குழு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எனினும், நான் அறிந்தவரையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது முதலாவது தவறு.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நான் தனியாக சந்தித்தபோது, தற்போதுள்ள நிலை குறித்து நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன்.

இதனை செயலாளருக்கு தெரிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது. அதன்பின்னர், ஜனவரி 5ஆம் திகதி மாலை 3 மணிக்கு, நானும், பிரதமரும், சட்டமா அதிபரும், இவர்களைச் சந்தித்தோம். தேர்தலை ஒத்திவைப்பதற்காக நாம் இவர்களைச் சந்திக்கவில்லை. அந்த சமயம் ஆணைக்குழுவில் பிளவு ஏற்பட்டிருந்தது.

டிசம்பர் 23ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானித்ததாக அவர்கள் கூறினார்கள். எனினும், வேட்பு மனுவை ஏற்பதற்கான திகதியைத் தீர்மானித்திருக்கவில்லை என்று இரண்டு உறுப்பினர்கள் கூறினார்கள். திகதியைத் தீர்மானித்ததாக ஒருவர் கூறினார். ஒருவர் இரண்டு பக்கமும் கதைத்தார். ஐந்தாவது உறுப்பினர் கண்டியில் இருந்தார். இதனால், கூட்டங்களின் அறிக்கைகளைத் தருமாறு சட்டமா அதிபர் கோரியிருந்தார். அறிக்கைகள் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். இதனை எப்படி ஏற்கமுடியும்.

எனவே, நீங்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தால், எவ்வாறு செயல்படுவது என்பதைக் கூற முடியும் என்று சட்டமா அதிபர் கூறினார். இதுகுறித்து ஒன்றுகூடிக் கலந்துரையாடி திகதியொன்றை தீர்மானிக்குமாறு அவர் கூறினார். எனினும், அவர்கள் சாலிய பீரிஸ் சட்டத்தரணியை வைத்துக் கொண்டு பணிகளை முன்னெடுத்தனர்.

சாலிய பீரிஸ், அரசியலுடன் தொடர்புபட்ட சட்டத்தரணி என்றும் அவரை எவ்வாறு பணியமர்த்துவது என்றும் ஆளும் தரப்பினர் என்னிடம் வினவினார்கள். அரசியலுடன் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை நியமிக்குமாறு கூறினார்கள். அல்லது சட்டமா அதிபரை வழங்குமாறு கோரினார்கள்.

இந்த நிலைமையில் சட்டமா அதிபரை வழங்குவது சிரமம் என்று கூறியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில், நான் தலையிடப் போவதில்லை என்று கூறினேன். உங்களுக்குத் தேவையான வகையில் செயற்படுமாறு கூறியிருந்தேன்.

சட்டத்தரணியொருவரை பணியமர்த்துவதாயின், எந்தவொரு கட்சியுடனும் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை, இந்த அரசாங்கத்தினால் பணியாற்ற முடியாது என்று கூறி, இந்த சட்டத்தரணியை பணியமர்த்தியிருந்தார்கள்.

இதனைவிட ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.யுடன் தொடர்புபட்ட சட்டத்தரணியொருவருடன் பணியாற்றியிருக்கலாம். இதனை மட்டுமே என்னால் கூற முடியும். எவ்வாறாயினும், இதன்பின்னர் இதுகுறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

இதற்குப் பதிலாக, 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டறிக்கையை வழங்கினார்கள். வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரிக்கும்போதே இந்த மதிப்பீட்டறிக்கையை வழங்கியிருந்தார்கள். எனினும், 9ஆம் திகதி பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். 5600 மில்லியன் ரூபா முற்பணம் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

மொத்தமாக 6 பில்லியன் ரூபா கோரியுள்ளார்கள். பண வீக்கத்தால் விலை அதிகரிக்குமே தவிர குறையாது. ஆனால் அன்று 10 பில்லியன் ரூபா தேவையெனக் கூறினார்கள். பண வீக்கம் குறைந்துள்ளதாக யாரும் கூறவில்லை, அதிகரித்திருப்பதாகவே கூறுகின்றனர்.

எனவே, 10 பில்லியன் அல்ல 12 – 13 பில்லியன் ரூபா தேவைப்படும் என்று நாம் கணக்கிட்டிருந்தோம். எனினும், 5 பில்லியன் ரூபா தேவை என்று கேட்டுள்ளனர். எனவே, இந்த மதிப்பீட்டறிக்கையை குறித்து அமைச்சு மீண்டும் ஆராய்ந்துள்ளது.

பொலிஸார் அதிகமாக கோருகின்றனர். விலைகள் அதிகரித்துள்ளதால் 2 அல்லது 3 பில்லியன் ரூபா தேவை என்று அவர்கள் கோருகின்றனர். இதுவொரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

10 பில்லியன் ரூபா செலவு உள்ள இடத்தில் 5 பில்லியன் ரூபாவில் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் கூறுகிறார்.

எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை இன்னும் அதிகமாக தேவை என்று பொலிஸார் கூறுகின்றனர். ஏனைய திணைக்களங்கள் முழுமையான மதிப்பீட்டறிக்கையை அனுப்பவில்லை.

ஏனைய திணைக்களங்களின் மதிப்பீட்டறிக்கைகள் குறித்து தாம் அறிவிக்கமாட்டோம் என்று இரண்டவாது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஒவ்வொரு திணைக்களத்தில் இருந்தும் ஒவ்வொரு மதிப்பீடுகளை எங்களுக்கு அனுப்புகின்றனர். பணம் இல்லாத நிலையிலும், ஏற்கெனவே தேர்தலுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணைக்குழு இந்த அடிப்படை பிரச்சினையை சீர் செய்ய வேண்டும். இவற்றுக்கு நிதியமைச்சு பதலளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்தக் கடிதத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்குப் பதிலாக பிரதம கணக்காளர் ஜீ.ஆர்.ஏ.கே.கமலத் கையெழுத்திட்டுள்ளார்.

இப்படி செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பைப் பார்த்தால், ஆணைக்குழுவின் பணிகளும், அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவினால், ஆணைக்குழுவின் தலைவருக்கோ, ஆணைக்குழுவின் வேறொரு அதிகாரிக்கோ வழங்க முடியும். ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கமைய, அதன் கட்டுப்பாட்டின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது வேறொரு அதிகாரியினால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

104 e6 பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதில் எங்கும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஆணையாளர் தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கடிதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. 09.01.2023ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்திற்கமைய தேர்தலின் முதற்கட்டப் பணிகளுக்காக, முற்பணம் வழங்குமாறு கோரியுள்ள போதிலும், அந்த முற்பணம் இதுவரை கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் கடிதமொன்றை அனுப்புகிறார்.

இந்த முற்பணம் வழங்கியிருந்தால், குறித்த அதிகாரிக்கு எதிராக எமக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். முதலாவது தேர்தல் ஆணையாளர் பணம் கேட்டு இந்தக் கடிதத்தை அனுப்பவில்லை. இந்தக் கடிதத்தை கணக்காளரே அனுப்பியுள்ளார்.

நிதி அதிகாரிக்கு ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூட அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதனை வழங்கியிருந்தால், அடிப்படை உரிமையை மீறியதாக பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக எவருக்கு வேண்டுமானாலும் நீதிமன்றம் சென்றிருக்க முடியும்.

இதன்பின்னர் அரச சேவை ஆணைக்குழு ஊடாக அவருக்கு தண்டனை வழங்கி, அவரை பணி நீக்கம் செய்திருக்க முடியும். இதன்பின்னர், தலைவர் பெப்ரவர் 3ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்திலும், தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் என்று எந்தவொரு கடிதத்திலும் குறிப்பிடவில்லை. இன்னுமொரு பிரச்சினையும் இருக்கிறது.

பெப்வரி 10ஆம் திகதி இன்னுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக இரண்டு அரசியல் கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட SEFR 062022 SEFR 072022 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வழக்குகள், தேர்தல் ஆணைக்குழுவினால் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டபூர்வமான பணிகளை முன்னெடுத்துள்ளதால், இதனை நிராகரித்து, தேர்தல் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்த்தால், அப்படியானதொரு தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கவில்லை.

மென்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லை என மனுதாரர் தரப்பினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெண்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லையென்றால் நீதிமன்றத்தினால் வழங்குவதற்கு தீர்ப்பெதுவும் கிடையாது.

7 ஆவது பிரதிவாதியான பிரதமரிடம் எந்த நிவாரணமும் கோரப்படவில்லை என அவர் சார்பாக ஆஜரான நெரீன் புள்ளே நீதிமன்றித்தில் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு எந்தப் பிணைப்பும் கிடையாதும்.

அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரியிருக்கலாம். இதில் எதனையும் மனுதாரர்கள் கோரவில்லை. இதன்படி எந்தவொரு அதிகாரியையும் குறைகூற முடியாது. இறுதியாக தேர்தல் குறித்து பிரச்சினை இருந்தது.

நாம் அறிந்த வகையில் இதுவரையில் தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சட்டபூர்வமான தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சிலர் மார்ச் 9ஆம் திகதி குறித்து பேசுகின்றனர். ஆனால் 9ஆம் திகதி குறித்து எனக்கு எதனையும் கூறமுடியாது. நான் அறிந்தவகையில் 9ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான சட்டபூர்வமான தீர்மானம் எதுவும் இல்லை.

104 ஆவது சரத்தின் பிரகாரம் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு கோரத்திற்கு 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஜனவரி 22ஆம் திகதி சண்டே ரைம்ஸ் பத்திகையில் செய்தியொன்று வெளியாகியது.

தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்ட கூட்டமொன்று நடந்ததாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது உறுப்பினர் எம்.எம். மொஹமட் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார். எனவே, ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினர் எம்.எம். மொஹமட்டும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதன்பின்னர், இதற்கான அனுமதியை ஏனையவர்களிடம் பெற்றுக்கொண்டதாக தலைவரே கூறியுள்ளார். இவர்கள் இருவருமே தீர்மானம் எடுத்துள்ளனர்.

எனவே, ஏனைய மூன்று உறுப்பினர்களிடம் கேட்டால், அவர்கள் வேறொரு நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கான சாட்சியங்களும் என்னிடம் இருக்கிறது.

இதன்படி, உத்தியோகபூர்வமாக தேர்தல் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதற்கு பணம் வழங்கினால், செயலாளரை பணி நீக்கம் செய்து, அவருக்கெதிராக வழக்கு தொடருமாறு பொலிஸாருக்கு கூற நேரிடும்.

இதே நிலைமையே அச்சக திணைக்களத் தலைவருக்கும் நடக்கும். இவர்கள் தமது தொழில்களை இழப்பார்கள். இவர்களை குறைகூற முடியாது.

இவர்கள் அரச அதிகாரிகள். உண்மையில் நாட்டில் பொருளாதார நிலைமையொன்று இருக்கிறது. உண்மையில் எங்களிடம் பணம் இல்லை. அத்துடன் தேர்தலை நிறுத்தத் தேவையும் இல்லை. அவர்களின் பணிகளை அவர்களுக்கு முன்னெடுக்க முடியும்.

இதுகுறித்து அனைவருடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை காண முடியும். எனினும், தற்போது பணம் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது தேர்தல் ஒன்றும் இல்லை.

தேர்தலை நடத்த பணம் இல்லை. பணம் இருந்தாலும் தேர்தல் ஒன்றும் இல்லை. என்ன செய்வது? எதற்காக கூச்சலிடுகிறீர்கள் ? உண்மையில், இந்த ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கே பொறுப்புகூற வேண்டும். தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தெரிவுக்குழுவை நியமித்து, இந்தத் தகவல்களை சேகரித்து அறிக்கையொன்றைத் தயாரித்து உயர் நீதிமன்றத்திற்கு அந்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நிதி குறித்த அதிகாரம் எங்களுக்கே இருக்கிறது. மெக்னா கார்ட்டா தொடக்கம் 1688 புரட்சி காலம் முதலே அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது.

நான்காவது சரத்தின் கீழ், இந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே, இதுகுறித்து பரிசீலித்து, அறிக்கை சமர்ப்பித்து உயர் நீதிமன்றத்திற்கு இதனை அனுப்பிவையுங்கள்

தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்னிடம் கூறினார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தல் தேவையில்லை என்பதை நான் இங்கு கூறவிரும்புகிறேன்.

முடியுமாயின் தேர்தலை ஒத்திவையுங்கள் நாங்கள் கொஞ்சம் கூச்சலிட்டு, பின்னர் அமர்ந்துவிடுவோம் என்று எனக்கு செய்தி அனுப்பினார்கள்.

ஐ.ம.ச, ஹெலிகொப்டர்,ஜே.வி.பியினர் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரவில்லையா? இவர்கள் வழக்கு தாக்கல் செய்தாலும் வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பது எப்படி என்று இவர்களுக்குத் தெரியாது.

மெண்டமூஸ் உத்தரவு வழங்குமாறு கோரி பின்னர் பின்வாங்கினார்கள்.அதற்கு நான் பொறுப்பில்லை. என்னை உங்கள் சட்டத்தரணியாக நியமித்தால் வழக்கை தொடர்கிறேன். இங்கு கூச்சலிடும் அநேகர் தேர்தலை ஒத்திவைக்குமாறு என்னிடம் கூறினார்கள்.

இங்கு பதாதை உயர்த்திக் கொண்டிருக்கும் பலரும் தேர்தலை ஒத்திவைக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் தேர்தலை ஒத்திவைக்கவில்லை. காரணம், தேர்தலை நடத்த இன்னமும் ஆணைக்குழு திகதியொன்றை தீர்மானிக்கவில்லை என்றார்.