ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் – ஆளுந்தரப்பினர் சபாநாயகரிடம் வலியுறுத்தல்

பொருளாதார பாதிப்பினால் மருந்து கொள்வனவிற்கு கூட தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 அதி சொகுசு வாகனங்கள் என்ற பொய்யான செய்தியை வெளியிட்டு அரசியல்வாதிகளின் உடமைகளையும்,பாராளுமன்றத்தையும் தீ வைக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.

ஊடக கலாசாரம் முறையாக பேணப்பட வேண்டுமாயின் ஊடகங்களையும்,சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.

ஊடகங்களிலும்,சமூக ஊடகங்களிலும் வெளியாகும் பொய்யான செய்திகள் அரசியல்வாதிகளின் உடமைகளுக்கும்.உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஊடக கண்காணிப்பு சட்டத்தை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே செய்தி வெளியீடு தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களுடன் விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சர்களுக்காக 239 சொகுசு வானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும்,பிரதான நிலை பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அரசியல் செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் நிதியமைச்சின் செயலாளரிடம் ஆலோசித்தோம்.இராஜாங்க அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் இல்லை,ஒரு துவிச்சக்கர வண்டி கூட இறக்குமதி செய்யப்படவில்லை.ஆகவே பொய்யான செய்திகளினால் அரசியல்வாதிகள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள்,அரசியல்வாதிகளின் வீடுகள் மீண்டும் தீக்கிரையாக்கப்படும்.

நாட்டின் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள பின்னணியில் மருந்து கொள்வனவு கூட தட்டுப்பாடு காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு அதி சொகுசு வாகனங்கள் என மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பி நாட்டில் மீண்டும் அமைதியற்ற தன்மையை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

ஊடகங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கபட வேண்டும்,ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.இராஜாங்க அமைச்சர்களுக்கு என வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை துறைமுக அமைச்சர் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 வாகனங்கள் என வெளியான செய்தி தொடர்பில் துறைமுக அதிகார சபையிடம் வினவினேன்,வெளியான செய்திக்கு அமைய எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை,ஆகவே அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் துறைமுக அதிகார சபையின் இணை நிறுவனம் சி.ஐ.டி யில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,அத்துடன் அந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற வரப்பிரசாத குழுவிற்கு உரிய தரப்பினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் எடுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இது பாரதூரமான செய்தி,நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள போது இராஜாங்க அமைச்சர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் என்ற தவறான செய்தி சமூகமயப்படுத்தப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரராவும் இந்த செய்தியை கொண்டு அரசியல் செய்துள்ளமையிட்டு வெட்கமடைகிறேன்.

ஆகவே மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன,பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மற்றும் இந்த செய்தியை முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் மற்றும் பரிமாற்றம் செய்தவர்களை பாராளுமன்ற வரபிரசாத குழுவிற்கு அழைத்து விசாரணையை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுங்கள் இல்லாவிடின் பாராளுமன்றத்தையும் இவர்கள் தீ வைப்பார்கள் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இவ்வாறான பிரச்சினையை நானும் எதிர்கொண்டேன்.என்னை தொடர்புப்படுத்தி வெளியான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஸ்தாபனத்திற்கு சென்றேன்.

எனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தேன். வெளியான செய்தி தவறானது என இரு தேசிய பத்திரிகைகளும் என்னிடம் மன்னிப்பு கோரினார்கள்.பொய்யான செய்தியை வெளியிடுவதால் எமக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவை பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.ஊடக கலாசாரம் முறையாக பேணப்பட வேண்டுமாயின் ஊடக செயற்பாடு கண்காணிப்பப்பட வேண்டும்.பொய்யான செய்திகள் வெளியாகுவதால் அரசியல்வாதிகளின் உடமைகள் தான் தீக்கிரையாக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியை முன்னெடுக்கவே பொய்யான செய்திகள் வெளியாகுகின்றன.இது நியாயமற்றது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மக்கள் பிரதிநிகளின் உடமைகளுக்கும்,உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஊடக செயற்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

வரலாற்றில் மக்கள் பிரநிதிகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதை மறக்க முடியாது.அரசியல்வாதிகளுக்கு எதிராக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.