ஐ.நா மனித உரிமை சபை நிகழ்ச்சி நிரலும் 52ஆவது கூட்டத் தொடரும்

ஐக்கிய நாடுகளைச் சபையின் ஆரம்பம் தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை உலகின் மனித உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, அவற்றிற்கு பரிகாரம் காண்பதற்காக, நடைமுறையில் இருந்து வந்ததுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின், பிரதி அமைப்பாக, 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறையில் விளங்குவது தற்போதைய ஐ.நா.மனித உரிமை சபை.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் கடந்த வாரம் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை இதன் 52ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான இவ் சபையின் தலைவராக, செஸ் குடியரசின் ஐ.நா.ஜெனிவா பிரதிநிதியான, திரு வச்லாவ் பாலேக் கடமையாற்றுகிறார்.

தற்போதைய ஐ.நா. மனித உரிமை சபைக்கும், முன்னைய ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இடையில் பாரீய வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதரணத்திற்கு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக 51 நாடுகள் இடம் பெற்றிருந்தனர்.

கண்காணித்து ஆராய்வு
ஆனால் தற்போதைய ஐ. நா.மனித உரிமை சபையில் 47 நாடுகள் உலகின் பிராந்திய ரீதியாக – ஆபிரிக்கா நாடுகளிற்கு (13) பதின்மூன்று நாடுகளும் ஆசியா நாடுகளிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், லத்தீன் அமெரிக்க அல்லது தென் அமெரிக்க நாடுகளிற்கு (8) எட்டு நாடுகளும், மேற்கு ஐரோப்பிய அமெரிக்க நாட்டிற்கு (7) ஏழு நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கு (6) ஆறு நாடுகள் என்ற அடிப்படையில் பிராந்திய ரீதியாக வகுக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழு வருடத்தில் ஒருமுறை, மார்ச் மாதத்தில் மட்டுமே நடைபெறும். ஆனால் ஐ.நா.மனித உரிமை சபை வருடத்தில் மூன்று முறை – மார்ச், யூன், செப்டம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

இதில் முன்னை ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு, தனது செயற்பாடுகளை ஐ.நா. சமூக பொருளராத சபையின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டுள்ளது. ஆனால் மனித உரிமை சபையானது ஐ.நா. பொதுச் சபையின் கண்கணீப்பின் கீழ் இயங்குவது ஓர் நல்ல விடயம். மனித உரிமை சபையின் கூட்டத் தொடர், வருடத்தில் மூன்று தடவை நடைபெறும் பொழுது, இச் சபை எப்படியாக உலக மனித உரிமைகளைக் கண்காணித்து ஆராய்வு செய்கிறது என நாம் ஆராய வேண்டுமானால், நாம் நிச்சயம் அதனுடைய கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆராய வேண்டும். கூட்டத் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் இவையாகவும் தெட்ட தெளிவாக அங்குப் பிரசுரமாவதுடன் அதற்கான விளக்கத்தையும் அங்கு விபரமாகக் கொடுப்பது வழமை.

நிகழ்ச்சி நிரல்
நடைபெறும் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல், பத்தாக (10) வகுக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தைப் பொறுத்து நாட்கள் மணித்தியாலங்கள் நிகழ்ச்சி நிரலிற்கு ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களிற்குக் கீழ், சில உப விடயங்கள் ஆராயப்படுகின்றன. இவ் அடிப்படையிலே உலகின் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை நிலைமைகள் இங்கு ஆராயப்படுகின்றன. இவ் அடிப்படையில் இதனுடைய நிகழ்ச்சி நிரலைக் கீழ் சுருக்கமாகத் தருகிறேன்.

முதலாவது (1) நிகழ்ச்சி நிரலாக – “நிறுவன மற்றும் நடைமுறை விஷயங்கள்”. இதில் மனித உரிமை பேரவையின் அமைப்பு, பணியகம், மனித உரிமைகள் பேரவையின் பணிகள் மற்றும் செயல்பாடுகளைப் போன்றவை உள்ளடக்கப்படுகிறது.

இரண்டாவது (2) நிகழ்ச்சி நிரலாக – “ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகர் மற்றும் செயலாளர் நாயகத்தின் அலுவலக அறிக்கைகள்” உள்ளடக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி நிரலின் கீழ், ஐ.நா.வின் கண்காணிப்பில் ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானங்கள் மூலம் உள்ளடக்கப்பட்ட சில நாடுகள் பற்றிய உரையாடல் ஆய்வுகள் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் தற்சமயத்தில் – எரித்திரியா, சூடான், சைப்ரஸ், மியன்மார் ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் நிலை ஆராயப்பட்டடுகின்றன.

ஜனநாயக மக்கள்
இதேவேளை – கொலம்பியா, குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ், தெற்கு சூடான், நிக்கருவா, ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களின் செயல்பாடுகளும் அறிக்கைகளும் ஆராயப்படுகின்றன.

இதேவேளை ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் உலகில் மற்றைய நாடுகளின், விசேடமாகச் சிறிலங்கா போன்று மிக மோசமான மனித உரிமை நிலமையைக் கொண்டுள்ள நாடுகள் பற்றி இங்கு எடுத்துரைப்பது வழமை.

மூன்றாவது (3) நிகழ்ச்சி நிரலாக – “அபிவிருத்திக்கான உரிமை உட்பட அனைத்து மனித உரிமை”. சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.

அபிவிருத்திக்கான உரிமை, மக்கள் மற்றும் குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்களின் உரிமைகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள், காணாமல் போனவர்கள், பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஆராயப்படுகின்றது.

நான்காவது (4) நிகழ்ச்சி நிரலாக – “மனித உரிமை சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்”.

தற்போதைய நிலையில், ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானங்கள் மூலம் பொலிவேரியா குடியரசு வெனிசுலா, எத்தியோப்பியா, ரஷ்ய ஆக்கிரமிப்பால் உருவான உக்ரைன் நிலைமை, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரிய), மியன்மர், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, பெலாருஸ், சிரிய அரபுக் குடியரசு, ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் நிலை ஆராயப்படுகிறது.

பூலோக ஆய்வு
ஐந்தாவது (5) நிகழ்ச்சி நிரலாக – “மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழிமுறைகள்”.

சிறப்பு நடைமுறைகளும் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான மன்றம், மனித உரிமைகள் , ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய மன்றம், சமூக மன்றம் போன்றவை இங்கு ஆராயப்படுகின்றன.

ஆறாவது (6) நிகழ்ச்சி நிரலாக – “தவணை முறையிலான பூலோக ஆய்வு” (U.P.R.)

ஐ.நா.வின் 193 நாடுகளின் நிலைமைகளை (ஐ.நா.வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களின் சரி பிழை ஏன் போன்ற விடயங்கள்) இங்குத் தவணை முறையில் மனித உரிமை சபையின் பணிக் குழுவினால் தவணை முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட நாடுகள் பற்றிய அறிக்கைகள், இங்கு உறுதிப் படுத்தப்படுகிறது.

பாலஸ்தீனம்
ஏழாவது (7) நிகழ்ச்சி நிரலாக – “பாலஸ்தீனம் மற்றும் பிற ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பிரதேசங்களில் மனித உரிமைகள் நிலைமை”.

கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்திலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பகுதியிலும் இஸ்ரேலிய குடியேற்றங்கள்.

இப்படியான ஓர் நிகழ்ச்சி நிரல் ஐ.நா.மனித உரிமை சபையில் உருவாகுவதற்கு, ஐம்பத்து ஏழு (57) இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான, ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ’ (Organisation of Islamic Cooperation – OIC) காரணியை உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்ச்சி நிரலை ஐ.நா.வின் அங்கத்துவ நாடானா இஸ்ரேல் அறவே விரும்புவதில்லை.

எட்டாவது (8) நிகழ்ச்சி நிரலாக – “வியன்னா பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தின் பின்தொடர்தல் மற்றும் செயல்படுத்துதல்”.

1993ஆம் ஆண்டு யூன் மாதம் 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை, ஆவுஸ்தீரியாவின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்ற இராண்டவது ‘உலக மனித உரிமைகள் மாநாட்டில்’ உருவாக்கப்பட்ட பிரகடனங்களும், அதனது முன்னேற்றங்களும் செயற்பாடுகளும் இங்கு ஆராயப்படுகிறது.

இலங்கை
பிரான்ஸ் தமிழ் மனிதர் உரிமைகள் மையம் (Tamil Centre for Human Rights – TCHR) ஆகிய நாம், அவ்வேளையில் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கு எமது அமைப்பினால், இலங்கை தீவில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மலையாகத் தமிழ் மக்கள் பற்றிய கண்காட்சி ஒன்றை இங்கு நடத்தியிருந்தோம்.

இதில் விசேடம் என்னவெனில், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துச் சகிக்க முடியாத சர்வதேச ஊடகவியலாளரும், மாநாட்டில் பங்கு பற்றிய முக்கிய புள்ளிகளும், இவ் மாநாட்டில் சிறிலங்கா சார்பாகப் பங்குபற்றிய சிறிலங்காவின் அமைச்சரான திரு. ஜோன் அமரதுங்கா அவர்களை, எமது கண்காட்சியைச் சென்று பார்க்குமாறு வற்புறுத்திய காரணத்தினால், அவர் எமது கண்காட்சிக்கு வருகை தந்து புகைப்படங்களைப் பார்வையிட்டு எம்முடன் உரையாடினார்.

தென் ஆபிரிக்கா
ஒன்பதாவது (9) நிகழ்ச்சி நிரலாக – “இனவெறி, இனப் பாகுபாடு, இனவெறி மற்றும் தொடர்புடைய டர்பன் பிரகடனம் மற்றும் செயல்திட்டத்தின் விரிவான அமுலாக்கம்”.

இவ்விடயத்தின் கீழ் உலகில் பல விதமான இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடுகள் பற்றி ஆராயப்படுவதுடன், டேபன் பிரகடனம் பற்றிய முன்னேற்றங்களும் செயற்பாடுகளும் இங்கு ஆராயப்படுகிறது.

2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்படெம்பர் 7ஆம் திகதி வரை தென் ஆபிரிக்காவில் டேபன் நகரில் “இனவித்தியசத்திற்கு எதிரான உலக மாநாடு”நடைபெற்றது. இங்கு உருவானதே டேபன் பிரகடனம் என அழைப்பார்கள்.

இவ் மாநாட்டிலும் பிரான்ஸ் தமிழ் மனிதர் உரிமைகள் மையம் கலந்து கொண்டு, அங்கும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்காட்சி ஒன்றை TCHRனால் நடாத்தப்பட்டது. இதில் தென் ஆபிரிக்காவின் பல முக்கிய அமைச்சர்கள் உட்பட சில சர்வதேசத்தின் முக்கிய புள்ளிகள் கண்காட்சியைப் பார்வையிட்டு, தமது ஆதரவுகள் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

எமது கண்காட்சிக்கு வருகைதந்த தென் ஆபிரிக்காவின் சிறிலங்கா தூதரகத்தின் பிரதிநிதிகள், இன்றைய எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவான திரு லக்ஸ்மன் கீரியல்லை போன்றோர் புகைப்படங்களைப் பார்வையிட்டு, எம்முடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.

பத்தாவது (10) நிகழ்ச்சி நிரலாக – “தொழில்நுட்ப உதவி மற்றும் திறனை வளர்ப்பது” 00 ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளை ஆராய்ந்த சில நாடுகள், அவற்றிற்கும் பரிகாரம் காணுவதன் பொருட்டு, சில விடயங்கள் பற்றியும், சில நாடுகள் மீதும் மனித உரிமை சபையின் நாற்பத்தியெழு பெரும்பான்மை அங்கத்துவ நாடுகளின் ஆதரவுடன், தீர்மானங்களை வெற்றியாக நிறைவேற்ற முயற்சிப்பார்கள். இங்கு முன் வைக்கப்படும் தீர்மானங்கள் சில படுதோல்வி அடைந்த நிலையும் உண்டு.

இப்படியாகவே ஐ.நா.மனித உரிமை சபையின் கூட்டத் தொடர்கள் கடந்த பதினேழு வருடங்களாக நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமை சபையின் நிகழ்ச்சி நிரல் அதன் நடைமுறைகள் என்பவற்றை, மனித உரிமையை தொழில்சார் கல்வியாக கற்றவர்களே புரிந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயநிர்ணய உரிமை 00 இதில் முக்கிய விடயம் என்னவெனில், தமிழ் மக்களைப் போன்று வேறு பல சுயநிர்ணயத்திற்குப் போராடும் மக்களிற்கான நிகழ்ச்சி நிரல், ஐ.நா.மனித உரிமை ஆணைக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் பிரத்தியேகமாக முன்பு இடம் பெற்றிருந்ததது.

ஆனால் தூர்அதிஸ்டவசமாக, ஐ.நா. மனித உரிமை சபையில் சுயநிர்ணய உரிமை என்றே பேச்சிற்கு அறவே இடம் கிடையாது.

நிகழ்ச்சி நிரல் (3) மூன்றில் சிறுபான்மையினர் பிரச்சினைகள், பயங்கரவாதம் பற்றி தாராளமாக உரையாற்ற உத்தியோகப்பூர்வமாக வழி வகுத்த பொழுதிலும், சுயநிர்ணய உரிமை பற்றிக் கதைப்பதற்கு உத்தியோகப்பூர்வமாக அங்கு இடமளிக்கப்படவில்லை.

சுயநிர்ணய உரிமை
முன்னைய மனித உரிமை ஆணைக்குழுவில், அதன் நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்களை, நிகழ்ச்சி நிரலிற்கு மாறான விடயங்கள் பற்றி யாரும் உரையாற்ற முயற்சித்தால், அவ் உரை உடனடியாக நிறுத்தப்படுவது வழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், மனித உரிமை சபையில் இவ் நடைமுறை கடுமையாகக் கையாளப்படுவதில்லை என்பதனால், சம்பந்தபடதா விடயங்களைக் கூறுவதும், மாறுபட்ட விடயங்களைக் குறிப்பிடுவதும் மனித உரிமை சபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மையைக் கூறுவதனால், சுயநிர்ணய உரிமை பற்றி ஐ.நா.மனித உரிமை சபையில் உரையாற்றுவதும், அறிக்கை சமர்ப்பிப்பதும் விழலிற்கு இறைத்த நீராகவே உள்ளது என்பதைப் பலர் அறியவில்லை. இதனாலே பதிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஐ.நா.மனித உரிமை சபையில் எமது அரசியல் உரிமை பற்றி, அதாவது சுயநிர்ணய உரிமை பற்றிப் பல தடவைகள் உரையாற்றிய பொழுதும், அங்கு எமக்குச் சார்பாக எவையும் நடைபெறவில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் என்னால், கட்டுரைகளில் எழுதிவருவது என்னவெனில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளிற்கான மனித உரிமை விடயங்களையே மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுகிறது. ஓர் இனத்தின் அரசியல் உரிமை, விசேடமாகச் சுயநிர்ணய உரிமை பற்றிய விடயம், ஐ.நா. வின் பொதுச்சபை, பாதுகாப்புச் சபையில் தான் இவற்றிற்கான வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஐ.நாவை நிராகரிப்பது தவறு
ஐ.நா.பொதுச் சபை, பாதுகாப்புச் சபையில் எப்படியாக, எவ்வேளையில், எம்மால், எம் இனத்திற்காக எதைச் செய்ய முடியும் என்பதை அறியாதவர்களாகப் பலர் உள்ளார்கள். இதற்காகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஐ.நா.வை நிராகரிப்பது தவறு.

இதற்கு நல்ல ஊதராணங்களாக – எரித்தீரியா, கிழக்கு தீமூர், தென் சுடான் மட்டுமல்லாது, போப்போ நியுகீனியாவிலிருந்து தமது சுதந்திரத்தை எதிர்பார்த்து நிற்கும் போகன்வில் மக்களின் அரசியல் பிரச்சனைகளிற்கான வாக்கெடுப்பு, ஐ.நா. பாதுகாப்புச் சபையினாலேயே, 2001ஆம் ஆண்டு வழிவகுத்தது என்பது சரித்திரம்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெற்ற பொதுஜன வாக்கெடுப்பில் போபன்வில் மக்கள், போகன்வில் நியுகீனியாவிலிருந்து பிரிந்து செல்வதற்காக வாக்களித்துள்ளனர். இதற்கமையா போகன்வில் என்ற நாடு 2027ம் ஆண்டு சுதந்திரம் அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா.மனித உரிமை சபை உருவாகிய 2016ஆம் ஆண்டின் பின்னர், அரசியல் பிரச்சனை அல்லது சுயநிர்ண உரிமை என்ற அடிப்படையில், இரு நாடுகள் உருவாகியுள்ளன. ஒன்று தென் சூடான் மற்றையது கோசவா.
இதில் தென் சூடான் விடயம் பொதுச் சபை, பாதுகாப்புச் சபையினாலேயே தீர்க்கப்பட்டவை. கோசவா விடயம் ராஸ்யா சீனாவின் தலையீட்டினால், ஐ.நா.வில் தீர்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோசவா என்ற நாடு உருவாகியுள்ளதுடன், இதை பெரும் தொகையான ஐ.நா. அங்கத்துவ நாடுகள் அங்கீகரித்துள்ளன.

ஆகையால் ஐ.நா.மனித உரிமை சபை மூலம் இலங்கை தீவில் தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளலாமென யாரும் கூறுவார்களானால், அவர்கள் ஐ.நா.மனித உரிமை சபையின் செயல்முறைகள் அணுகுமுறைகளை கற்று அறியாதவர்களாகவே காணப்படுவார்கள்.

ஐ.நா. மனித உரிமை சபையில் பொறுப்பு கூறல் மட்டுமே ….சத்வீகமான விடயம்…. இங்கு எந்த இனத்திற்கு அரசியல் தீர்வு கிடைத்து என்ற சரித்திரமே கிடையாது.

52ஆவது கூட்டத் தொடர்
இம்முறை நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 52ஆவது கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றிய விடயம், மனித உரிமை சபையினது நிகழ்ச்சி நிரலில், 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உள்ளடக்கப்படவில்லை.

ஆனால் 52ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் திரு வோல்கா தேர்க், சிறிலங்காவின் நிலைமை பற்றி தனது உரையில் குறிப்பிட்டதுடன், சிறிலங்காவிற்கான இணை குழு நாடுகளான – கனடா, மலாவி, மொன்ரனீகிறோ, வட மசிடோனியா, பிரித்தானிய, அமெரிக்கா ஆகிய நாடுகள் சிறிலங்கா 51வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறியிருந்தனர்.

எதிர்வரும் கூட்ட தொடர்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிச்சயம் தொடர்ச்சியாக 51ஆவது கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் பற்றிக் கூறுவார்.

எதிர்காலத்தில் ஓர் இறுக்கமான தீர்மானம் சிறிலங்கா மீது வருவதானால், அது 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 57வது கூட்ட தொடரிலேயே நடைபெறலாம். ஆனால் நாங்கள் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தில்லுமுல்லுக்களைக் குறைத்து கணிப்பிட முடியாது.

ஏற்கனவே ஜனாதிபதி ரணிலின் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் படலங்களில் செயற்படுவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

இதில் ஒன்று, பயங்கரவாத சட்டத்தை மறுசீரமைத்து, பெயர் மாற்றம் செய்து, உலகத்தை ஏமாற்றும் வேலையுடன், தென் ஆபிரிக்காவின் முன்னெடுப்பில் உள்நாட்டு பொறிமுறை என்ற வாசகங்களுடன், ஏற்கனவே செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவை யாவும் நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை.

இம்முறை நடைபெற்ற கூட்டத் தொடரில் – சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.சி.ஜே. இமடர் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா விடயம் பற்றி எந்த உரையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேறு சில அமைப்புக்கள் ஆங்காங்கே உரையாற்றியிருந்தார்கள். இவர்களது கருத்துக்களை, ஐ.நா.அங்கத்துவ நாடுகளும், ஐ.நா.முக்கிய புள்ளிகளும் எவ்வளவு தூரம் செவிமடுப்பார்கள் என்பது புரியாத புதிர்.

முன்னைய கூட்டத்தொடர்கள் போல், இம்முறையும், சிறிலங்கா தமது நட்பு நாடுகளிற்காகச் சிறிய உரைகளைச் சபையில் ஆற்றியிருந்தார்கள். அடுத்த 53வது கூட்டத் தொடர் எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவுள்ளது.