25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது : அடுத்த கட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ஜானக வக்கும்பர

நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.

குறித்த தினத்திற்கு முன்னர் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வேறு பிரதேசங்களில் தற்காலிக நியமனத்தை வழங்கி அவர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுடன் சுமூகமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பள பிரச்சினையும் காணப்படுகிறது.

மார்ச் 9ஆம் திகதி முதல் இம்மாதம் 25ஆம் திகதி வரை அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே ஏப்ரல் 25ஆம் திகதியின் பின்னர் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதிலுள்ள நெருக்கடி தொடர்பிலும் இதன் போது ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டது.

இது குறித்து பரிந்துரையொன்றை தயாரித்து பொது நிர்வாக அமைச்சிற்கு அனுப்புவதற்கு இந்தக் கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய குறித்த அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிக்கு அப்பால் பிரிதொரு பிரதேசத்தில் தற்காலிக நியமனத்தை வழங்கி , சம்பளத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகாமை குறித்து இதன் போது தெரிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சுடன் இது குறித்து கலந்துரையாடி தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுடன் எமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை. தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமுமாகும்.

அதுவரையில் ஏனைய நடவடிக்கைகளை முரண்பாடுகளின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சுடன் விரைவில் பிரிதொரு சந்திப்பினை மேற்கொள்ளும். அதன் பின்னரே தேர்தலை நடத்தக் கூடிய தினம் குறித்து அறிவிக்கப்படும்.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையில் இம்மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.

எனவே 25ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். தேர்தல் ஆணைக்குழு பல நடவடிக்கைகளுக்காக நிதியை கோரியுள்ளது.

அவை நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்மானிக்க வேண்டிய விடயங்களாகும்.

அவை குறித்து பிதரமரால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுபடுத்தப்படும். மே 11ஆம் திகதி தேர்தலுடன் தொடர்புடைய பல வழக்கு விசாரணைகள் உள்ளன.

அவை தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். தற்போது ஆளுனர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 340 உள்ளுராட்சி மன்றங்களினதும் நிர்வாக நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.