சிறிய குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கு புதிய சட்டம் ; நீதி அமைச்சர்

சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அத்துடன் சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு முடியுமான வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய அமைச்சின் விடயபொறுப்பான அமைச்சருக்கு சாட்டப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய 3வருட காலத்துக்காக நாட்டில் இருக்கும் அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களுக்கும் பிரதேச கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அதன் பிரகாரம் கொழும்பு மெகசின், கொழும்பு ரிமாண்ட், கொழும்பு வெலிகடை. வட்டரக்க மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 26ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் குற்றவாளியாக்கப்பட்ட 800பேர் வரை இருக்கின்றனர். யாரேனும் நபர் ஒருவர் சிறைப்படுத்தப்படுவதற்கு ஏதாவதொரு சமூக காரணமாக இருக்கலாம்.

குற்றம் என்னவாக இருந்தாலும் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை கவனித்து பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வசதிகளுக்கு மேலதிகமாக கைதிகளுக்கு தேவையான நலனோம்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு சிறைச்சாலை கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் 1934ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்தடவையாக மனிதாபிமான அடிப்படையில் இந்த நாட்டு சிறைச்சாலை ஒழுங்கு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் நபர்களை புனர் வாழ்வளிப்பதற்காக சிறைச்சாலைக்குள்ளேயே 6 நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று சிறு குற்றங்கள் செய்வர்களை வீட்டுக்காவலில் வைக்க முடியுமா என தேடிப்பார்ப்பதற்காக சட்டம் அமைப்பதற்கு தற்போது குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.