40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு வார கால தடை உத்தரவு நீக்கம்

கியூ.ஆர். குறியீட்டு விதிகளை மீறி எரிபொருள் விற்பனை செய்த 40 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு வார கால தடை உத்தரவு நீக்கப்பட்டு நாளை மறுதினம் (12) முதல் குறித்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பின் ஊடாக கியூ.ஆர். குறியீடு மூலமாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ‍ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும், குறித்த விதிகளை மீறி எரிபொருள் விற்பனையை செய்திருந்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு வார கால தடை உத்தரவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விதித்திருந்தது.

கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு விதிக்கப்பட்டிருந்த இந்த தடையானது 11 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஆகவே, நாளை மறுதினம் நள்ளிரவு முதல் குறித்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் 50 சதவீத எரிபொரு‍ளை எந்நேரமும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சகல எரிபொருள் நிரப்பு டேங்கர்களுக்கும் ஜி.பி.எஸ். (GPS) கண்காணிப்பு உபகரணம் பொருத்தப்படும். அதை அடுத்து, அனைத்து தனியார் எரிபொருள் நிரப்பு டேங்கர்களுக்கும் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது