தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது ‘ருத்ரன்’ : ராகவா லோரன்ஸ் செய்த நற்காரியம்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடன இயக்குநரும் பட இயக்குநரும் நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ருத்ரன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதோடு, படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அன்றைய தினம் இசை வெளியீட்டு நிகழ்வை விஜய் டிவி புகழ் பாலா தொகுத்து வழங்கினார்.

பாலா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக பயன்படுத்தும் வரும் ஒரு கலைஞர் ஆவார்.

அதை கருத்திற்கொண்ட ராகவா லோரன்ஸ் இசை வெளியீட்டு நிகழ்வின்போது மேடையில் பாலாவின் சேவையை பாராட்டி, அவருக்கு 10 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பின்படி) பணத்தை வழங்கி கெளரவித்தார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்காக சேவையாற்றிவரும் ராகவா லோரன்ஸின் இந்த அதிரடி செயல் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

ராகவா லோரன்ஸின் கலைத்துறையோடு சேர்ந்த சமூக சேவைப் பணிகளும் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தருவது போல் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகும் ‘ருத்ரன்’ படமும் பெரியளவில் பேசப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘ருத்ரன்’ திரைப்படம் தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ். கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் ஆகும். இதில் ராகவா லோரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே.பி. திருமாறன் கதை, திரைக்கதை எழுத, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். அக்ஷன், என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தயாரித்திருக்கிறார்.

படத்தின் முன்னோட்டத்தில் ராகவா லோரன்ஸின் முத்திரையுடன் கூடிய கொமர்ஷல் அம்சங்கள் துல்லியமாக இடம்பெற்றிருப்பதால், இந்த திரைப்படம் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.