இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவில் பூர்த்திசெய்யவேண்டும் என்ற அழுத்தங்களை உலகநாடுகளிற்கு அமெரிக்கா கொடுக்கவுள்ளது

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமெரிக்காவின்திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் அழுத்தங்களை கொடுக்கவுள்ளார்.

உலகவங்கி சர்வதேச நாணயநிதியத்தின் இந்த வார சந்திப்பின் போது உலக நாடுகளை சேர்ந்த சகாக்களை சந்திக்கின்றவேளை அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஒட்டுமொத்த கடன்நிவாரணத்திற்கான உறுதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என வலியுறுத்துவார்.

திறைசேரியின் உதவிச்செயலாளர் ஜெய்சாம்பாக் இதனை தெரிவித்துள்ளார்.

திறைசேரிசெயலாளர் இந்த வாரம் ஜாம்பியா கானா போன்ற பொதுவான கட்டமைப்பு விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கும் மூன்றாம் உலக நாடுகளின் கடன்சுமைகளை அகற்றி வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான முயற்சிகளை மேற்கொள்வார் என திறைசேரியின் உதவிச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சாம்பியா கானா ஆகிய நாடுகள் ஏற்கனவே தங்கள் கடன்களை செலுத்த முடியாத வங்குரோத்துநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

குறைந்தவருமான நாடுகளில் 60 வீதமானவை கடன்நெருக்கடியில் சிக்குண்டுள்ளன எனினும் குறைந்த வருமான நாடுகளிற்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்காக ஜி20 ஏற்படுத்திய பொதுகட்டமைப்பு உடனடி நிவாரணத்தை வழங்க தவறியுள்ளது.

ஜி20 கட்டமைப்பின் கீழ் ஜாம்பியா கானா எத்தியோப்பியா இலங்கை ஆகியவற்றின் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கின்ற வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதே முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள திறைசேரியின் உதவிச்செயலாளர் ஜெய்சாம்பாக் இலங்கை நடுத்தர வருமான நாடு என்பதால் வேறு கடன் திட்டத்தை முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.