உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த ஆரம்ப வரைபு பிரதமரிடம் கையளிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழுவின் அறிக்கையின் ஆரம்ப வரைபு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிவினால் செவ்வாய்கிழமை (11) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப வரைபில் பிரதேச எல்லைகள் மற்றும் மக்கள் தொகை குறித்த புதிய எல்லை குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த வரைவு எதிர்காலத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன.

முழுமையான அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதுவரையில் கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படும் என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் , எல்லை நிர்ணய குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஜயலத் ரவி திஸாநாயக்க , டபிள்யு.டீ.என்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.