புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் 13ஆவது திருத்தம் குறித்து இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல் உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுடன் 10 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி , இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரால் இவ்விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சிக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் விளக்கினார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் இதன் போது கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பரிலும், இவ்வாண்டு ஜனவரியிலும் ஜனாதிபதியால் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கும் , ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பது உள்ளிட்ட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் அமைச்சர் இதன் போது விளக்கமளித்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் விளக்கினார்.

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த புதுப்பிப்பை அவர் இராஜ தந்திரிகளுக்கு வழங்கினார்.

மேலும் நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த அனுபவப் பகிர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தென்னாபிரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது அது குறித்த நடைமுறைகளை எளிதாக்கியமைக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி ஆகியவற்றின் திட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்தின் கட்டமைப்பு சீர்திருத்த செயல்முறைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க விளக்கமளித்தார்.

மேலும் , நல்லாட்சி, ஊழலை ஒழித்தல், கடன் நிலைத்தன்மை, நிதி முகாமைத்துவம், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கான சமூக பாதுகாப்பு ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

அண்மையில் நிறுவப்பட்ட வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகம் உள்ளிட்டவை குறித்த அரசாங்கத்தின் முன்முயற்சிகளை வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இவ் விளக்கமளிப்புக்களைத் தொடர்ந்து இராஜதந்திரிகள் முதலீட்டு ஊக்குவிப்பு, நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.