2024 இல் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சரின் புதிய திட்டம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் 2024இல் ஒரே வருடத்துக்குள் நடத்தி பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம்.

அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் 7800 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பங்குபற்றலுடன் கல்வி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற, குறைந்த வருமானம் பெறும், பொருளாதார கஷ்டத்துடன் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்காக மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்த வருடத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்துக்குள் நடத்த முடியுமான வகையில் கல்வி நடவடிக்கைகளை படிப்படியாக வழமையான நிலைக்கு கொண்டுவந்து, பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம்.

அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளிவந்துள்ள 1800 ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நியமனம் வழங்கி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் இருந்துவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மொழி போன்ற, அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை இருந்துவரும் விடயத் துறைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னர், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் 35 வயதுக்கு குறைந்த பட்டதாரிகளில் இருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களை தெரிவுசெய்து இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.