நிலையான மின் கட்டணம் 250 ரூபாவாக குறைக்கப்படும் – மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும்.

நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.

மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானது. 0-30 வரையான மின் அலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 9 சதவீதத்தாலும் குறைக்கவுள்ளோம்.

அத்துடன் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும்.0 – 30 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு,அலகொன்றின் விலை 25ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 0 -30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தை 23 வீதத்தால் குறைக்கவும், 31 – 60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7வீதத்தால் கட்டணத்தை குறைக்கவும், உணவக பிரிவினருக்கு 29 வீதம் முதல் 40 வீதம் வரை மின்சார கட்டணத்தை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.