மனிதப் புதைகுழிகளில் இருந்து வெளிவந்துள்ள உண்மைகள்! கொக்குத்தொடுவாயில் முதலாவது முயற்சி – சுமந்திரன்

உண்மையைக் கண்டறிவதில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கப்போகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகையால்தான் முல்லைத்தீவு, கொக்குத் தொடுவார் மனிதப்புதைகுழி அகழ்வின் போது நான் அங்கு சென்றிருந்தேன் எனவும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அழுத்தத்தை நாம் வழங்குவோம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றேன்.

அதன்படி இதில் ஒரு சர்வதேச அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை நாம் வழங்குவோம்.

குறித்தவொரு கட்டமைப்பின் ஊடாக உரியவாறு நிதி ஒதுக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் மூலம் சர்வதேச நியதிகளுக்கு அமைவாக இம் மனிதப்புதைகுழி விவகாரம் கையாளப்பட வேண்டும் என்பதற்கான முதலாவது முயற்சியை நாம் கொக்குத்தொடுவாயில் முன்னெடுக்கின்றோம்.

சர்வதேச ரீதியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்ற நாடுகளில் இத்தகைய மனிதப்புதைகுழிகளில் இருந்துதான் பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

எனவே இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் உரியவாறு கையாள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.