பாகிஸ்தானுடனான உலகக் கிண்ண தொடர் தோல்விகளை நிவர்த்திக்க இலங்கை குறி

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுடன் தொடர்ச்சியாக அடைந்து வந்துள்ள தோல்விகளுக்கு முடிவுகட்ட இலங்கை குறிவைத்துள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 7 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

ஆனால், கொழும்பில் நடைபெற்ற தீர்மானம் மிக்க ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிகொண்ட உற்சாகத்துடன் ஹைதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தல் இலங்கையும் பாகிஸ்தானும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன.

உலகக் கிண்ண சாதனை மழை பொழிந்த தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கடும் சவால் விடுத்து தோல்வி அடைந்தது.

மறுபுறத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு பிரதான சுழல்பந்துவீச்சாளர்களும் இடம்பெறாதது இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் மஹீஷ் தீக்ஷன விளையாடவுள்ளமை இலங்கைக்கு சற்று தெம்பைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தீக்ஷன இறுதி அணியில் இடம்பெறுவதாக இருந்தால் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் அவருக்கு இடம்கொடுக்க வேண்டிவரும்.

இந் நிலையில், பாகிஸ்தானை ஒரு பலம்வாய்ந்த எதிரணியாக கருதுவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநர் நவீத் நவாஸ் தெரிவித்துள்ளார்.

‘பாகிஸ்தான் ஒரு பலம்வாய்ந்த அணியாகும். எனினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவ்வணியை எதிர்த்தாடி வெற்றிபெற்றமை இலங்கைக்கு அனுகூலமாக இருக்கிறது. ஒவ்வொரு அணியினதும் பலத்தையும் பலவீனத்தையும் இரண்டு அணிகளும் நன்கு அறிந்துள்ளன. எனவே, இந்தப் போட்டி கடும் போட்டித்தன்மை மிக்கதாக அமையும் என நான் எண்ணுகிறேன்’ என நவீத் நவாஸ் தெரிவித்தார்.

மேலும், இலங்கை பந்துவீச்சாளர்கள் மாறுபட்ட வியூகங்களைப் பிரயோகித்து ஒவ்வொரு விதமாக பந்துவீசுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய மூவரும் அரைச் சதங்கள் குவித்து தமது திறமையை வெளிப்படுத்தினர்.

பின்வரிசையில் கசுன் ராஜித்தவும் துடுப்பாட்டத்தில் தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினார். எனினும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா அல்லது தீக்ஷனவுக்கு வழிவிடுவாரா என்பது போட்டிக்கு சற்று முன்னர் தீர்மானிக்கப்படும்.

பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா ஆகியோர் கணிசமான ஓட்டங்களைப் பெறுவது அவசியமாகும்.

பாகிஸ்தானின் வேகப்பந்துவிச்சாளர்களான ஷஹீன் ஷா அப்றிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோரை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் நிதானத்துடன் எதிர்கொண்டு முதல் 10 ஓவர்களில் விக்கெட்களை இழக்காமல் சமாளித்தால் இலங்கையினால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும்.

அதேவேளை, பாகிஸ்தானின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் சரியான இலக்குகளை நோக்கி பந்துவீச வேண்டும்.

இதேவேளை, பாகிஸ்தானும் இன்றைய போட்டியிலும் வெற்றிபெறுவதை குறியாகக் கொண்டு விளையாடவுள்ளது.

‘இலங்கை அணியைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம். அண்மைய காலங்களில் அவர்களோடு விளையாடியுள்ளோம். குறிப்பாக ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடியிருந்தோம். எவ்வாறாயினும் கடந்த வருடம் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி எம்மைவிட சிறப்பாக விளையாடியிருந்தது.

‘எனினும் இலங்கை வீரர்களை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். ஆடுகளத்தில் பிரயோகிக்கவென எங்களிடம் ‘இரகசிய ஆயுதம்’ இருக்கிறது. இலங்கை அணியிடம் உள்ள ஆற்றல்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், எமது வீரர்கள் நம்பிக்கையுடன் இலங்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்’ என்றார் ப்றட்பர்ன்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித்த அல்லது மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், சவூத் ஷக்கீல், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்றிடி, ஹரிஸ் ரவூப்