நடிகர் பிரஜின் நடிக்கும் ‘சமூக விரோதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான பிரஜின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சமூக விரோதி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழகத்தின் தமிழ்த் தேசிய கருத்தியலை வலியுறுத்தும் அரசியல் ஆளுமைகள் இணைந்து வெளியிட்டனர்.

இயக்குநர் சீயோன் ராஜா எழுதி இயக்கி இருக்கும் புதிய திரைப்படம் ‘சமூக விரோதி’. இதில் பிரஜின், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜீஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாலக்கி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜியோனா ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிகாட்டும் விழிப்புணர்வு முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.‌ நான் பொழுதுபோக்கிற்காக படம் எடுப்பவன் அல்ல.

கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.