எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில் பாதுகாப்பு தரப்பினர் பொலிசார் வடக்கில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நேற்றைய தினம் வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவரை வீதியில் சுட்டுக் கொன்றுவிடுவோம் என ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த சிவாஜிலிங்கம் பாதுகாப்பு தரப்பினர் பொலிசார் தமக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என்ற மமதையில் இவ்வாறான மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்காக கடைக்கு சென்று , பாண் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் , வழிமறித்து , நாம் மோட்டார் சைக்கிளிலை மறித்த போது நிறுத்தாமல் ஏன் ஓடினாய் என தகாத வார்த்தைகளால் பேசி அவரது மோட்டார் சைக்கிளையும் உதைத்துள்ளார்.
அதன் போது அவர் தான் சந்திக்கு வரவில்லை எனவும் , தான் பக்கத்து கடையில் பாண் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் , பதிலளித்துள்ளார். அதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது துப்பாக்கியை அவருக்கு நீட்டி “நான் நினைத்தால் இதிலையே சுட்டுப்படுகொலை செய்வேன் உன்னைஎன மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.