அயர்லாந்து பின்னணியைக் கொண்ட தனது, பாட்டனால் அயர்லாந்து விடுதலை இயக்கத்தில் இருந்தவர் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மை தனக்கு புரிகின்றது என பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (Prof Francis A.Boyle ) தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பொய்ல் அவர்கள், 1995ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு குரல் கொடுத்துவருவர் என்பது மட்டுமல்லாது, தமிழ்மக்கள் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ தனியரசுக்கு உரித்துடையவர்கள் உரக்ககூறிவருபவர்.
கடந்த டிசெம்பர் 9ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் பிரிவு ‘அலைகள்’ ஒருங்கிணைத்திருந்த ‘அனைத்துலக இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக நாள் (International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide) இணைவழி கருத்தரங்கில் சிறப்புரையாற்றும் போதே இக்கருத்தினை பேராசிரியர் அவர்கள் முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், செர்பனிக்கா இனப்படுகொலையில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதனை உலக நீதிமன்றம் இனப்படுகொலையென ஏற்றுக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இனப்படுகொலைக்கு படுகொலை என்பது எண்ணிகையின் அடிப்படையிலானது அல்ல. அப்படுகொலைக்கான நோக்கம் இனப்படுகொலைக்கானது என்பதே முக்கியமானது. ஈழத்தமிழர்களுக்கு நடந்ததும் இனப்படுகொலைதான்.
இதற்கான பரிகார நீதியினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.
அவ்வாறு நாடுகளின் ஒத்துழைப்பினை தேடும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் செயற்பட்டு வருகின்றார்.
தற்போது தமிழர்கள் புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த வேண்டும். எவ்வாறு இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனியவர்கள் The Boycott, Divestment, Sanctions (BDS) எனும் புறக்கணிப்பு இயக்கத்தினை நடத்தினார்களோ அவ்வாறானதொரு இயக்கத்தினை ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும் என பேராசிரியர் பொய்ல் தனதுரையில் இடித்துரைத்திருந்தார்.
பேராசிரியர் பலஸ்தீன இயக்கங்களுடன் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தவர் என்பதோடு, உலக நீதிமன்றத்தில் பொஸ்னியா-கெர்சிகோவினா இனப்படுகொலைக்கு நீதிவேண்டி அமக்களுக்கு சட்டப் போராட்டம் நடத்தி நீதியை பெற்றவர்.
இணையவழி இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் பல வளப்பெருமக்கள் கலந்து கொண்டு இனப்படுகொலை, அதற்கான சான்றுகள், அதற்கான பரிகார நீதி என்று பல்வேறு கோணங்களில் உரையாடல்களை நிகழ்த்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.