சுகாதாரத் துறையினது துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – சஜித்

நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அவற்றை செயல்படுத்த தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (12) மருந்துப்பொருட்கள் மாபியா தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மருந்துகளும் தடுப்பூசிகளும் இரத்தமாற்றம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அவசியம் என்றாலும், அவை தற்போது நாட்டில் இல்லை. மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டாலும், மருந்துப் பொருள் மாபியா மூலம் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றை சட்டவிரோதமாக சந்தையில் நுழைக்கும் ஊழல் மிக்க செயலை செய்து கொண்டு அரசாங்கம் தனது திறமையை நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளும் தரம் குறைந்ததாகவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கமும் சுகாதார அமைச்சுமே பதிவு செயல்முறைக்கு புறம்பாக இறக்குமதி செய்யும் இந்த முறையை பரவலாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் பல ஆச்சரியமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன . புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், தரமற்ற மருந்துகளாக கொண்டு வரப்பட்டு புற்றுநோயாளிகளை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளது. ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உயிரியல் ரீதியிலான சிக்கலான மருத்துவத்தில் கூட திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு நடக்கும் போது ஜனாதிபதி பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த சட்டவிரோத மருந்துப் பொருள் வியாபாரத்திற்கு சுகாதார அமைச்சர் மாத்திரமன்றி, ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் பாதுகாக்க வாக்களித்த 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, பொய்யான கதைகளை உருவாக்கி மருந்துப்பொருள் மாபியாவுடன் நின்ற 113 பேரும், இந்த மருந்துப் பொருள் மோசடிகளுக்கு சமமாகப் பொறுப்புக் கூற வேண்டும். நாட்டு மக்களை வாழ வைப்பதை விட சுகாதார அமைச்சரை திருப்திப்படுத்தி தனது அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதே ஜனாதிபதிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

வங்குரோத்தான நாட்டில் இத்தகைய மோசடிகள் மூலம் பணம் சம்பாதிக்கும் வியாபாரங்களை பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமில்லை. மக்களைக் கொல்லும் மக்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்த சட்ட விரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், நாட்டின் சட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் அமுல்படுத்தப்படும்.