இலங்கை பாராளுமன்றத்தில் கேள்விக்கான விடையை அறிவிக்க மறுத்தமையால் சபையில் கடும் வாக்குவாதம்

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கேள்விக்கான பதில்களை வழங்காமல் சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புதெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

அத்துடன் கேள்விகளை முன்வைத்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சபை நடுவில் வந்து செங்கோலை எடுப்பதற்கு முற்பட்டதைத் தொடர்ந்து சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் சபை நடவடிக்கையை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை (19) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது கேள்வியாக எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் கேள்விக்கு பதிலளிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரை சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது வாய்மூல விடைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்திருந்தது. அதனால் பதில்களை சபைக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இதன்போது அஜித் மான்னப்பெரும உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர், வாய்மூல கேள்விக்கான விடையை வழங்குமாறு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சரை பார்த்து கூச்சலிட ஆரம்பித்தபோது, அமைச்சர் டிரான் அலஸ் பதில் வழங்க மறுத்து, பதில்களை சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சபையில் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சபை நடுவுக்கு வந்து, ஏதோ தெரிவித்த நிலையில் செங்கோலுக்கு அருகில் வந்து, செங்கோலை எடுப்பதற்கு முற்பட்டார்.

இதன்போது படைக்கல சேவிதர்கள் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனை அவதானித்த சபாநாயகர், அஜித் மான்னப்பெருமவின் செயலை கடுமையாக கண்டித்து, சபை நடவடிக்கையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காலை 10.40 மணியளவில் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சபை நடவடிக்கை மீண்டும் காலை 11.05 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது, சபாநாயகர், அஜித் மான்னப்பெரும சபையில் மிகவும் ஒழுக்கயீனமாக நடந்துகொண்டு, நிலையியற் கட்டளைக்கு விரோதமாக செங்கோலை பிடித்தார்.

அதனால் அவரின் பாராளுமன்ற சேவையை இன்று முதல் 4 வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக சபைக்கு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.