பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் (20) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு தசாப்தங்களின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால், நாளையுடன் கப்பல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வௌியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி மாதம் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை சீராக இருக்கும் பட்சத்தில், பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்க முடியும் என்பதால், அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.