க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மறுபரிசீலனை : இறுதி நாள் இன்று!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. இதற்கென ஒதுக்கப்பட்ட இணையத்தளமான www.doenets.lk ஊடாக பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பிக்கும்போது, ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தியும், புதிய பயனர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தியும் பதிவு செய்துகொள்ள முடியும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் இணையத்தளத்திலுள்ள தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல் காணொளியைப் பார்த்து தெளிவு பெறுவது அவசியமாகும். ஒரு பாடத்திற்கான கட்டணமாக 200 ரூபாவை கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபாலகங்கள் ஊடாகச் செலுத்த முடியும் என்பதோடு, கட்டணத்தைச் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




