அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது.
இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு அமைய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் வீதிகளுக்கு குறுக்காக கயிறுகளில் எச்சரிக்கை பதாதை போடப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, உடன் அமுலுக்கு வரும்வகையில் வெளியிடங்களில் இருந்து மாளிகைக்காடு கிழக்கு நோக்கி வருபவர்களை தடுப்பதற்காக காலவரையறையின்றி மூடப்படுவதாக காரைதீவு சுகாததார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
ஏற்கனவே கெரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் அவர் இங்குள்ள பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும். இப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சோதனைகள் முடிவுற்று, மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துமுடிந்த பிற்பாடு, இப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது.
இதன்படி, மாளிகைக்காடு மீன்வாடிப் பிரதேசம் தொடக்கம் கரைச்சை வரைக்குமான பிரதேசம் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.