பொலிஸார் உள்ளிட்ட அரச படைகளால் கொடூரமாக சித்திரவதைப்படும் மக்கள்! சாத்தியம் ஆகுமா சட்டம்?

இலங்கையில் பொலிஸார் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் ஏராளமான மக்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 11ஆவது பிரிவு சித்திரவதை, பிற மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனையை வெளிப்படையாக தடை செய்கிறது. இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களைக் கண்டிப்பதோடு, முடிந்தவரை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.

எனவே, தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனைக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை உணரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் நேற்று முன்தினம் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சித்திரவதைக்கு எதிரான லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான ”ப்ரீடம் ப்ரொம் டோர்ச்சர்” இந்த ஆண்டு பெப்ரவரியில் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, கடந்த எட்டு வருடங்களில், வைத்திய மற்றும் சட்ட உதவிக்காக அனுப்பப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.