வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு: தலைவியை ஆஜராகுமாறு பணிப்பு

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன், அந்த சங்கத்தின் தலைவியையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவிக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைப்பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா தலமை பொலிஸ் பரிசோதகரினால் இந்த மன்றிற்கு ARI623./2020 கீழ் தாக்கல் செய்த அறிக்கையின் படி நாளையதினம் (2020.12.18) காலை 10.00 மணிக்கு வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நடாத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் 1400 நாட்களை கடந்துள்ளமையால் இதுவரையும் இந்த குடும்பத்தினருக்கு தீர்வு கிடைக்காதமை சம்பந்தமாக, அன்றைய தினம் விளம்பர பலகைகளை காட்சிக்கு வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது பரவி வரும் கொரோனா நோய் மேலும் பரவுவதற்கும், மற்றும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமுள்ளமையினாலும், தனிமைப்படுத்தல் விதிமுறை இல்லாமல் போகும் என்பதனாலும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்த இருக்கும் இந்த ஆர்ப்பாட்ட குழுவின் தலைவியாகிய தேக்கவத்தை,வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா என்பவருக்கு குற்றவியல் நடவடிக்கை முறைசட்ட கோவையின், சட்டம் 106(1) பிரிவின் கீழ், இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு இத்தால் கட்டளையிடுகின்றேன்.

இது சம்பந்தமாக அறிந்துகொள்வதற்காக தேக்கவத்தை, வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா ஆகிய உம்மை 2021.01.04 திகதி அன்று காலை 09.30 மணிக்கு இந்த மன்றிற்கு முன்னிலைப்படுமாறு இத்தால் கட்டளையிடுகின்றேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.