தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தால் சுயநிர்ணயம் கிடைக்குமா?

செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதால் எமக்கு சுயநிர்ணயம் மற்றும் தேசியம் கிடைக்குமா என்று வெண்கலசெட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆ.அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 30 மில்லியன் ரூபாய் நிதியை பெற்று பல்வேறு அபிவிருத்திகளை செய்திருந்தோம். அதனை மக்களுக்கு சரியான முறையில் செலவிட்டிருந்தோம். கூட்டமைப்பு உறுப்பினர்களின் வட்டாரங்களுக்கு நாங்கள் நிதிகளை ஒதுக்கியிருந்தும் அவர்கள் அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. அவர்கள் சபைக்கு வந்ததன் நோக்கம் எனக்கு புரியவில்லை. வந்ததில் இருந்து குழப்பங்களை ஏற்ப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

இந்த வரவுசெலவுத்திட்டம் தோற்க்கடிக்கப்பட்டமையால் 1.9 மில்லியன் ரூபாய் திரண்ட நிதிக்குள்ளே செல்லும் நிலை காணப்படுகின்றது. அதற்கு கூட்டமைப்பே பொறுப்பு. வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்த உறுப்பினர்கள் நிதிக்குழு உறுப்பினர்கள், காரணமின்றி இதனை எதிர்த்திருக்கின்றனர்.

தங்களது கட்சித்தலைமையின் அச்சுறுத்தலாலேயே வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாக உறுப்பினர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை எதிர்த்திருக்கிறார்கள்.

யாழ் மாநகரசபையின் வரவுசெலவுதிட்டத்தை ஈ.பி.டி.பி தமிழ் காங்கிரஸ் ஆகிய இரண்டும் இணைந்து தோற்கடித்துள்ளது. ஆனால் செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதால் எமக்கு சுயநிர்ணயம் மற்றும் தேசியம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

மாகாணசபை தேர்தலை மையமாக வைத்தே இந்த நாடகத்தை இவர்கள் நடத்துகிறார்கள். கோட்டாவிற்கு எதிராகவே தான் வாக்களித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சொல்கிறார். நாடாளுமன்றத்திலே வரவு செலவுத்திட்டத்திற்கு அவர்களது கட்சி ஆதரவளித்திருக்கின்றது.

மக்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.தமது கதிரைகளிற்காகவே தமிழ் கட்சிகள் சண்டையிடுகின்றது.மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அபிவிருத்திக்களை செய்வதனை சீர்குலைக்கும் விதமாகவே தமிழ்கட்சிகள் இந்த ஆட்சியை கைப்பற்றியிருக்கின்றது.

இதன் போது கருத்து தெரிவித்த உறுப்பினர் யூட்,

இனத்தின் விடுதலைக்காக நாடாளுமன்றில் ஒன்றுபடாத தமிழ்க் கட்சிகள், பிரதேச மட்டத்தில் ஒண்றிணைந்துள்ளது. கடந்த முறை இருந்த சபையில் கூட்டமைப்பு செய்ததைவிட எமது கட்சி பல்வேறு அபிவிருத்திக்களை முன்னெடுத்துள்ளது.

இவர்கள் இணைந்திருப்பதில் எமக்கு பிரச்சனையில்லை. அதன் மூலம் அபிவிருத்திகளை பெறக்கூடியதாக இருந்தால் நாமும் ஆதரவளிக்க தயார். ஆனால் அந்த அபிவிருத்தி இனி கிடைக்குமா என்பதில் ஐயம் இருக்கிறது. இதேவேளை பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் நடுநிலமை வகித்தமை வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக இருக்கிறது.

பதவி ஆசைக்காக கூட்டமைப்பு இவ்வாறு செயற்படுவதானது எமது மக்கள் நலனில் அவர்கள் அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகின்றது. மக்களின் அபிவிருத்தியில் இடையூறாகவே அவர்கள் இருக்கிறார்கள். இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே பார்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.