சிறிங்காவுக்கு எதிராக புதிய யோசனையை கொண்டு வரும் அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய யோசனை ஒன்றை கொண்டு வர அமெரிக்கா ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 யோசனையில் இருந்து விலக தற்போதை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக புதிய யோசனையை கொண்டு வர அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த யோசனையானது 30/1 யோசனையின் நீச்சியாக கொண்டு வரப்படவுள்ளது. 34/1 மற்றும் 40/1 ஆகிய இரண்டு யோசனைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான இந்த யோசனைகளில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா பீ டெப்லிட்ஸ் இடையிலான சந்திப்பு அண்மையில் தூதுவரின் உத்தியோபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

அமெரிக்கா கொண்டு வரவுள்ள யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்கும் என சுமந்திரன், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி வருவதால், இனப்பிரச்சினை தீர்வு கிடைக்கும் வகையில் கொண்டு வரவுள்ள புதிய யோசனையில் மாற்றம் செய்ய வேண்டும் என சுமந்திரன், அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருடன் சுமந்திரன் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட எந்த யோசனைகள் மூலமும் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல,

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா யோசனையை கொண்டு வரவுள்ளது. இது பயங்கரமான நிலைமை. ஒரு புறம் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனநாயக ரீதியாக மிகவும் கீழ் நிலைமைக்கு சென்றுள்ளோம். மனித உரிமைகளை எமக்கு பாதுகாக்க முடியாத காரணத்தினால், சர்வதேச ரீதியில் எமக்கு பிரச்சினைகள் வர ஆரம்பித்துள்ளன.

இது மிகவும் பயங்கரமானது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது நாட்டிற்கு கிடைத்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போயிருந்தது. இதன் காரணமாக எமது நாட்டின் ஆடை உற்பத்திக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்றது.

2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கைகளை முகாமைத்துவம் செய்து, மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாத்து 19வது திருத்தச்சட்டத்தின் மூலம் முன்னோக்கி கொண்டு சென்றதால், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற முடிந்தது.

அது மாத்திரமல்ல ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இழந்திருந்த நிலையில், அந்த வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்தது. இலங்கையில் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஆடை உற்பத்தியாளர்களுக்கு விசேட வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் மனித உரிமை பேரவையில் யோசனை கொண்டு வரப்பட்டால், ஜீ.எஸ்.பி. பிளஸ் மற்றும் ஐரோப்பாவுக்கான மீன் ஏற்றுமதி ஆகியவற்றை நாம் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.