ஜெனீவா அமர்வு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை அமெரிக்காவிற்கு முக்கிய வேண்டுகோள்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மீண்டும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையுடனான தனது ஈடுபாட்டை புதுப்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் அமெரிக்காவிற்கான தேசிய பரப்புரை இயக்குநர் ஜோன் லின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்கா- உலக சுகாதாரம் உலக மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் துணைகுழுவுக்கு சமர்பித்துள்ள எழுத்து மூல வாக்குமூலத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தனது அமர்வில் கவனம் செலுத்தவுள்ள நிலையில் அமெரிக்கா மனித உரிமை பேரவையுடன் தனது ஈடுபாட்டை புதுப்பிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை ,பிரஹீத் எக்னலிகொட விவகாரம்,ரம்ஜி ராசீக் சக்திக சத்குமார போன்றவர்களுடன் தொடர்புபட்ட முக்கிய நீதிமன்ற விசாரணைகளை நடத்துவது உட்பட மனித உரிமைகளை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா இலங்கைக்கு வலியுறுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரம்ஜி ராசீக்கிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறும்,சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்யவேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் எனவும் அமெரிக்கா இலங்கையை கேட்டுக்கொள்ளவேண்டும் என மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அவர்களின் சார்பில் குரல்கொடுப்பவர்கள் அவர்களுடைய சட்டத்தரணிகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.