இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளதாவது
2010ஜனவரி 24 ம் திகதி பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட அரசியல் கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி நான்.
2010 முதல் நான் எனது கணவர் காணாமல்போனமை தொடர்பில் நீதிக்காக போராடி வருகின்றேன்.
இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் பொதுவான போராட்டத்திற்காகவும் நான் குரல்கொடுத்துள்ளேன்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கான கடப்பாட்டின் அடிப்படையிலும், ,அமெரிக்கா இலங்கை இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும் முன்னைய அரசாங்கம் உருவாக்கிய காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம், பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்து குடும்பத்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த பிரச்சாரத்திற்கான ஒரு மைல்கல்லாகும்.
2018 இல் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டவேளை அதன் தலைவரையும் ஆணையாளர்களையும் அரசமைப்பு பேரவையின் பரிந்துரையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி நியமித்தார்.
காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கு, தற்போதைய ஜனாதிபதி தலைவராக நியமித்துள்ள நீதிபதி உபாலி அபயரத்ன அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்.
தேர்தலிற்கு பின்னர் ஜனாதிபதி ராஜபக்ச உருவாக்கியுள்ள இந்த ஆணைக்குழு காணாமல்போகச்செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குரல் எழுப்புவதற்கான தளத்தை வழங்கியுள்ளது.
இதன் மூலம் நீதித்துறையின் செயற்பாடுகளை அலட்சியம் செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் ,சாட்சிகளை அச்சுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த ஆணைக்குழுவின் புதிய தலைவர், இவ்வாறான வன்முறைகள்- முத்திரை குத்துதல் -பாதிக்கப்பட்டவர்கள் -சாட்சிகளை அச்சுறுத்துதல் ஆகியவற்றை ஊக்குவித்திருந்தார்.
நான் இவ்வாறான முத்திரை குத்துதல்கள் அச்சுறுத்தல்களை நேரடியாக எதிர்கொண்டிருந்தேன்.
எனது கணவர் காணாமல்போன விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பலர் அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்தனர்.
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நபர் கடந்த பலமாதங்களாக,காணாமல்போகசசெய்தலில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து, நீதிமன்றத்தின் ஊடாக நீதியை பெறுவதற்காக அரசமைப்பின் ஊடாக காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்கப்பட்ட உரிமையை குறைத்து மதிப்பிடும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
அவ்வாறான நபர் காணாமல்போனவர்களின் அலுவலகம் மூலம் நீதி உண்மை மற்றும் நிவாரணத்தை வழங்க தயாராகயிருப்பாரா?
காணாமல்போனவர்களின் அலுவலகம் உருவாக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக விளங்கிய ஐக்கியநாடுகளும் அதன் உறுப்பினர்களும் காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கான நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து அரசாங்கத்துடன் தலையிட்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான திறனை கொண்டிருக்கின்றனர் என நான் கருதுகின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.