இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படக்கூடும்! எச்சரிக்கும் சஜித் அணி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படக்கூடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாடு பொருளாதார ரீதியிலும் ஏனைய துறைகளிலும் பாரிய வீழ்ச்சியடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் நிறைவேற்று அதிகாரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.மறுபுறம் மனித உரிமைகள் மீறல்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மீண்டுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு மீண்டும் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வரப்பட்டால் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படக்கூடும். இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போதுள்ளதை விடவும் பெரும் வீழ்ச்சியடையும்.நாட்டின் ஆட்சியாளர்களாலேயே நாடு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுள்ளது. இதனால் மக்கள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

வரலாற்றில் முதன் முறையாக தேங்காய் விலைக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எனினும், இவ்வாறு வெளியிடப்பட்ட எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பட்டது.இதனால் இலங்கைக்கு பல மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. அவ்வாறிருந்த போதிலும் அதன் மூலமும் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

இவ்வாறு வருமானத்தைக் குறைத்துக்கொண்டு அரசு மக்களையும் ஏமாற்றி தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.