உலகின் செல்வாக்கான பெண்ணுக்கு கனடாவில் நடந்த கொடூரம்

பாகிஸ்தான் இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெண் ஆர்வலரான கரீமா கனடாவில் மர்மமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் இராணுவ ஊடுருவலை எதிர்க்கும் பலூச் அரசியல் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இதனைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான பலூச் அரசியல் ஆர்வலர்கள் தங்கள் நாட்டில் இருந்து தப்பி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் உள்ளடங்குவர்.

இந்நிலையில், பலுசிஸ்தானில் வசித்து வந்த கரீமா என்ற பெண் ஆர்வலர், சுவிட்ஷர்லாந்தில் நடந்த ஐ.நா கூட்டத்தொடரிலும் இராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்துப் பேசினார்.

கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை என புகார் வழங்கப்பட்ட நிலையில், அவரது இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி ரொறண்டோ பொலிஸார் கேட்டு கொண்டனர்.

இந்நிலையில், கரீமா கனடாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை – கடந்த 2016ஆம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பெண்கள் பற்றிய பி.பி.சியின் பட்டியலில் கரீமா இடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில், பலுசிஸ்தான் வளங்களை பாகிஸ்தான் எடுத்துக்கொண்டு மக்களை அழித்து வருகிறது என குற்றச்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.