சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலைக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு அதிகாரியாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் முறையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சுகாதார உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு வழங்கப்படும் சுகாதார உபகரணங்களுக்கு மேலதிகமாக, நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு ஆசிரியரை சுகாதார மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலை சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதே அவரது பொறுப்பாகும்.
ஒவ்வொரு பாடசாலையின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அதிபர் உள்ளிட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாடசாலைகளின் சுகாதார ஏற்பாடுகளையும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை திறக்க முடிவு செய்யப்படவில்லை. ஆனால் விடுதிகளை திறக்கலாமன நம்புகிறோம்.
வீட்டில் எவருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது குடும்பத்தில் யாராவது பி.சி.ஆர் பரிசோதனை செய்திருந்தால், முடிவுகள் கிடைக்கும் வரை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைபாடசாலைக்கு அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் பிள்ளைகளின் நலன் மற்றும் எதிர்காலத்திற்கான ஆதரவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார்.