ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனை கையாள்வதில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமைப்பாடு ஏற்படுவதற்குப்பதிலாக முரண்பாடுகள் மேலோங்கிவருவதாகவே தெரிகின்றது. தமிழ்க் கட்சிகளிடையே கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவரும் நகர்வுகள் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைத்து, கஜேந்திரகுமார் அணி, விக்கினேஸ்வரன் அணி என்பன பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவை ஒற்றுமையாக அணுக வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிடமிருந்தும் இதற்கான அழுத்தங்கள் அதிகமாகவே உள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகும் கூட்டத் தொடர் முக்கியமானதாக அமையப்போகின்றது என்பதற்குப பல காரணங்கள் உள்ளன.
01. இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகின்றது. அடுத்த கட்டம் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
02. ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து வெளியேறுவதாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில், இலங்கையை எவ்வாறு மேற்கு நாடுகள் கையாளப்போகின்றன? என்பதற்கான பதில் மார்ச் மாதத்தில் கிடைக்கும்.
03. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைத்து தீவிரபோக்கைக் கொண்டுள்ள கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளாகியிருப்பதால், அவர்களுடைய கருத்துக்களும் ஜெனீவாவில் செல்வாக்கைச் செலுத்தும்.
04. மே மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இந்திய மத்திய அரசாங்கம் எழுந்தமானத்துக்கு இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் என எதிர்பார்க்க முடியாது என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
இது போன்ற காரணங்கள் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடரின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கின்றது. மட்டுமன்றி, தமிழ்த் தரப்புக்கள் இதனை சாதகமாகக் கையாள்வதற்கான சூழ்நிலைகளும் உருவாகியிருக்கின்றது. ஆனால், தமிழர் தரப்பில் இது குறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்று இதுவரையில் இடம்பெறவில்லை. சிங்களத் தரப்புக்களை இதனை ஐக்கியமாக எதிர்கொள்வதற்கு தயாராவதைப் போல, தமிழர் தரப்பில் தயாரிப்புக்கள் இல்லை.
“பூனைக்கு மணி கட்டுவது யார்?” என்ற நிலையில் தமிழ்ப் புத்திஜீவிகள் கூட இதற்கான முன்முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள். தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான். ஜனாதிபதித் தேர்தலின் போது ஒற்றுமையை ஏற்படுத்தப்போய், “கற்றுக்கொண்ட பாடங்கள்” தமிழ்ப் புத்திஜீவிகளின் செயலின்மைக்குக் காரணமாக இருக்கலாம். அப்படியானால் இதனை யார் முன்னெடுப்பது?
கொழும்பில் நேற்று கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், “சர்வதேச சமூகத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஒன்றுபட்டு கையாள முயற்சிப்பது” எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அக்கட்சிகளுடன் தொடர்ந்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான முடிவு.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால், அவை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். குறுகிய கட்சி நலன்களுக்கு அப்பால் சாதகமாகவுள்ள சர்வதேச சூழ்நிலையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் தமிழ்த் தரப்பினர் இராஜதந்திரத்துடன் செயற்பட வேண்டும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும், நிவாரணத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன், பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதற்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக வரப்போகும் கூட்டத் தொடர் உள்ளது. உள்நாட்டில், கடும்போக்கைக் கொண்டுள்ள ஒரு சிங்கள – பௌத்த அரசு பதவியேற்றிருக்கும் நிலையில் தமிழர்களுக்குள்ள ஒரேயொரு பிடிமானம் ஜெனீவாதான்.
உள்ளூர் நிலைமைகளும், சர்வதேச நிலைமைகளும் தற்போதைய நிலைமையில் பெருமளவுக்கு தமிழர்களுக்குச் சார்பாகவே உள்ளன. இந்த வாய்ப்பை “தேசியம் பேசும் தமிழ்க் கட்சிகள்” எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றன? இதனைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.