ஐநாவில் போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டும்! ஆதரவளிக்கிறார் சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலிருந்து போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டுமென வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களது கருத்தை தான் வெகுவாக மதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதனால் தமிழர் தரப்புக்கு எவ்வித பயனும் ஏற்படவிலை.

கூட்டமைப்புடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்ட அரசங்காத்தினால் கூட எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

தற்போதைய அரசாங்கமானது ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரின் தீர்மானத்துடன் ஒத்துப்போக முடியாது என இவ்வருட ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டது.

இதன் காரணமாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைக் காட்டிலும் அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்விடயம் மனித உரிமைகள் பேரவையின் கரங்களில் இருந்து வெளியே போக கூடாது. சர்வதேச அரங்கில் இது தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து போர்க்குற்ற விவகாரம் அகற்றப்பட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களது கருத்தை நான் வெகுவாக மதிக்கிறேன். ஏனெனில் அவர்கள் தமது கருத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள்.

மனித உரிமைகள் பேரவையில் இவ்விடயம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் ஆனால் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனக் கூறும் பெரும்பான்மையினரின் கருத்து எனக்கு புரியவில்லை என்றார்.