நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவான திருத்தச் சட்டங்கள்

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் நாளைய தினம் அதிகளவான திருத்தச் சட்டங்கள் ஒரே தினத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்சியங்கள் கட்டளைச் சட்டம், பிணை சட்டம், குற்றவியல் தண்டனை சட்டம், அலுவலகம் மற்றும் கடைகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான சட்டம், குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டம் ஆகிய 8 சட்டங்களுக்கான திருத்தச் சட்டங்கள் நாளைய தினம் கொண்டு வரப்படவுள்ளன. இவை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமான இந்த சட்டத்திருத்தங்கள், இவ்வாறு திடீரென கொண்டு வரப்படுவதன் பின்னணியான, கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள அரசாங்கம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் சதித்திட்டத்தின் ஒரு நடவடிக்கை என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திருத்தச் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் அவற்றை திரும்ப பெற அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் வலுவான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.