
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய கடன் நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் தேசிய ரீதியில் 5,904 பில்லியன் ரூபாவும், சர்வதேச கடனாக 3,922 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சபையில் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் ரூபாவின் பெறுமதியை நிலையாக கையாள தவறியதன் காரணத்தினால் 2020-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம் வாங்கிய சர்வதேச கடனுக்கான மேலதிகமாக 1,152 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது, இதன்போது வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாட்டின் கடன் நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கையில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டியுள்ள தேசிய கடனானது 5,904 பில்லியன் ரூபாவாகும். இதில் 2020 ஆம் ஆண்டில் 1,203 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் 1,557 பில்லியன் ரூபாயும், 2022 ஆம் ஆண்டில் 1,128 பில்லியன் ரூபாயும், 2023 ஆம் ஆண்டில் 1,120 பில்லியன் ரூபாயும், 2024 ஆம் ஆண்டில் 896 பில்லியன் ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது.
அதேபோல், 2020 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் செலுத்த வேண்டியுள்ள சர்வதேச கடனானது 3,922 பில்லியன் ரூபாவாகும்.
இதில் 2020 ஆம் ஆண்டில் 760 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது (4,095 மில்லியன் அமெரிக்க டொலர்கள்).
2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் ரூபா (3,910 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்தப்படவேண்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 832 பில்லியன் ரூபா (4,481 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்த வேண்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 787 பில்லியன் ரூபா (4,242 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்த வேண்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 817 பில்லியன் ரூபா (4,404 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்த வேண்டியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச கடன் விவகாரங்களை கையாளும்போது, பல்வேறு விடையங்களை கருத்திற் கொள்வோம். குறிப்பாக கடனுக்கான வட்டி, ரூபாவின் பெறுமதி, கடனை பெற்றுக்கொள்ள ஏதுவான காணிகள், கடன்களை செலுத்த கையாளும் முறைமைகள், நாட்டின் கடன் மற்றும் தேசிய உற்பத்திக்கான தன்மை என்பவற்றை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் நாம் வாங்கியுள்ள கடன்களை முழுமையாக செலுத்தி முடிப்போம். ஆனால் நாம் எமது ஆட்சியில் ரூபாவின் பெறுமதியை நிலையாக வைத்திருந்ததை போலவே கடந்த ஆட்சியிலும் ரூபாவின் பெறுமதியை தக்கவைக்க தவறிய காரணத்தினால் நாம் பெற்றுக்கொண்ட கடனை விடவும் அதிகமான தொகையை மீள செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் ரூபாவின் பெறுமதியை நிலையாக கையாள தவறியதன் காரணத்தினால் 2020-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம் வாங்கிய சர்வதேச கடனுக்கான மேலதிகமாக 1,152 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 223 பில்லியன் ரூபாய் மேலதிகமாகவும், 2021 ஆம் ஆண்டில் 213 பில்லியன் ரூபாய், 2022 ஆம் ஆண்டில் 245 பில்லியன் ரூபாய், 2023 ஆம் ஆண்டில் 231 ரூபாய், 2024 ஆம் ஆண்டில் 240 மில்லியன் ரூபாய் மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.