ஜெனீவா பிரேரணைக்கான புலம்பெயர் அமைப்புக்களின் முன்மொழிவு ஆவணத்திற்கு எம்.பி.கள் எழுவர் ஒப்புதல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது அமர்வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளது.

குறித்த பிரேரணையின் உள்ளடக்கமானது எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் இம்முறை புலம்பெயர் அமைப்புக்களிடையே பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

அதனடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட மேலும் சில புலம் பெயர் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த நாட்களில் மெய்நிகர் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் தவிர்ந்த ஏனைய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆவணத்தில் உள்ள முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவர் சித்தார்த்தன் இந்த ஆவணத்தில் கைளொப்பமிட்டுள்ளபோதும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிரந்தர தீர்வொன்று காணப்பட வேண்டும். அந்த தீர்வானது சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அடிக்குறிப்பிட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆவணத்தின் உள்ளடக்கத்தில்,

01.நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் ஆகியவை தொடர்பாக சர்வதேச நீதிப்பொறிமுறையை முன்னெடுத்தல் அவசியமாகும். அந்த நீதிப்பொறிமுறையானது சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வேச நீதிமன்றம் அல்லர் விசேட தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.

2. குற்றங்களை இழைத்தவர்கள் பதிலளிக்கவல்லதாக விசாரணைகளையும், வழக்குகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்று சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக இலங்கையில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அப்பொறிமுறையானது மியன்மார் விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட மியன்மாருக்கான சர்வதேச புலனாய்வு விசாரணைப் பொறிமுறை ஒத்ததாகவோ (ஐ.ஐ.எம்.எம்) அல்லது சிரியா விவகாரங்களை கையாள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சுயாயாதீன புலனாய்வு விசாரணைப் பொறிமுறையாகவோ (ஐ.ஐ.ஐ.எம்) இருக்க வேண்டும். அ.சர்வதேச மனிதாபிமானச்சட்டங்கள் பல்வேறு மனித உரிமைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலான ஆதாரங்களை சேகரித்தல், ஆய்வு செய்தல்,ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆ.சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சர்வதேச நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் குற்றவியல் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான கோப்புக்களை தயாரித்தல். இ.கடந்த கால மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக எதிர்கால நிகழ்வுகள் குறித்த பரிந்துரைகளுடன் குறிப்பட்ட கால இடைவெளியில் கண்காணிப்புச் செய்து அறிக்கை சமர்ப்பித்தல்.

03.புரையோடிப்போயிருக்கும் நீண்டகாலப் இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் அணுசரணையுடன் மீண்டும் கடந்த கால கசப்பான நிகழ்வுகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தி நிலையான சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் வகையிலான தீர்வொன்று வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

04.வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கள உத்தியோகத்தர்களை நியமிப்பதோடு,நிகழ்கால அத்துமீறல்கள் உள்ளிட்ட விடயங்களை அறிக்கையிடுதல் என்பன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.