இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! தமிழ் அமைப்புக்கள்

Flag of Sri Lanka (Ceylon)

இலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் பிரித்தானியாவில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று இன்று (05 Jan 2020) விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், கல்விமான்கள், மத தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலருடன் பல கட்டங்களாக நடைபெற்ற தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முடிவில் அனைவரின் ஏகோபித்த சம்மத்துடனும் ஆதரவுடனும் இந்த நகர்வு கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தமிழர் ஒருங்கிணைப்பு பேரவை (TCC), உலக தமிழர் வரலாற்று மையம் (WTHS), தமிழ் தகவல் மையம் (TIC), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), பிரித்தானிய தமிழ் வர்த்த சம்மேளனம் (BTCC), தமிழ் சொலிடாரிட்டி (TS), பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTU), Together Against Genocide (TAG), பழமைவாத கட்சிக்கான பிரித்தானிய தமிழர்கள் (British Tamil Conservatives), தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils for Labour), மிதவாத கட்சிக்கான தமிழர்கள் (Tamils for Lib Dems), தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை (TNA-UK), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய கிளை (TELO-UK), இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வதேச மையம் (ICPPG), அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் (ICETR), தமிழர் கலை பண்பாட்டு நடுவம் (TECC), தமிழீழ மாவீரர் பணிமனை ஐக்கிய இராச்சியம், மக்கள் நலன் காப்பகம் (PWA-UK), உலக தமிழர் வரலாற்றுமைய மகளிர் அமைப்பு, அகதிகள் உரிமைகள் (Refugee Rights Campaign), வீரத்தமிழர் முன்னணி பிரித்தானியா, நாம் தமிழர் பிரித்தானியா, தேசிய விடுதலைக்கட்சிக்கான தமிழர்கள் (Tamils for NLP), Nations Without States உட்பட்ட பிரதான அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் முன்னெடுத்திருத்தன.

இதற்கு பல பல்கலைக்கழகங்களின் தமிழ் சமூகங்கள் (Tamil Society), கல்விசார் அமைப்புக்கள், தமிழ் பாடசாலைகள், ஊடக அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அறக்கட்டளைகள், மத வழிபாட்டு நிலையங்கள், சட்ட நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் என இதுவரை 211 அமைப்புக்கள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கி, கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக Migrants Organise மற்றும் Room To Heal வெளிநாட்டு அமைப்புக்களும் ஆதரவு வழங்கியிருப்பது சிறப்பானது.

தற்போது இலங்கை விவகாரத்தில் தீர்மானத்தை கொண்டுவரும் அதிகாரம் பிரித்தானியாவின் கையில் உள்ளது. இந்நிலையிலேயே, எவ்வாறான தீர்மானத்தை பிரித்தானியா கொண்டுவரவேண்டும் எனவும் அதற்கு பிரித்தானிய தமிழர்கள் என்ன செய்யவேண்டும் எனவும் பல புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வழங்கிய ஆலோசனைப்பிரகாரம், பன்முக கோரிக்கைகளால் ஏற்பட கூடிய பின்னடைவுகளை தவிர்க்கும் முகமாகவும், ஐ.நா மனித உரிமை சபையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, நடைமுறைச்சாத்தியமானதுமான ஒற்றைக் கோரிக்கையாக இந்த ஆவணம் துறைசார் நிபுணர்களால் வரையப்பட்டுள்ளது.

அந்த வகையில் “மியான்மருக்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்க 46 வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் எடுக்குமாறு நாங்கள் எங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மிகவும் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி விசாரித்து, ஆதாரங்களை சேகரித்து கிரிமினல் வழக்குக்கான கோப்புகளை தயாரிக்கக் கோருகிறோம். அத்தோடு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களையும் விசாரணை செய்து, செப்டம்பர் 2015 இன் OISL அறிக்கையில் உள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்பதே இந்த ஆவணத்தின் சாராம்சமாகும்.

குறுகிய கால அவகாசம் காரணமாக ஏனைய அமைப்புக்களை இணைத்துக்கொள்ள முடியாத போதிலும், அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, அவர்களின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில், இரணரடாவது தொகுதி கையெழுத்துக்கள் அடுத்தவாரம் சமர்ப்பிக்கபடவுள்ளன.

இதனால் பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ் புலம்பெயர் மக்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த கூட்டு கோரிக்கைக்கு, பிரித்தானியாவிலுள்ள அனைத்து அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், அறக்கட்டளைகள், மதவழிபாட்டு நிலையங்கள், தமிழ் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள, நுண்கலை நிலையங்கள், விளையாட்டு கழகங்கள், முதியோர் சங்கங்கள், ஊடகங்கள், தொழில்சார் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தமிழ்கடைகள், என அனைவருடைய ஆதரவும் தேவை எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவு வழங்க விரும்புவோர் தனது பெயர், தான் பிரதிநிதித்துப்படுத்தும் அமைப்பு/நிறுவனம்/ஸ்தாபனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை பின்வரும் இணையவழி படிவத்தில் நிரப்பி அனுப்பி வைக்கும்படி வேண்டப்பட்டுள்னர்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfr6FHOAp1v1r2dwLh1sbPxjt-Fmra02uoNjKnSY0z-5eev8w/viewform?usp=sf_link

அல்லது மேலே கேட்கப்பட்ட உங்கள் விபரங்களை fcojointletter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.